
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்திற்கும் திருச்செந்தூருக்கும் இடையே அமைந்திருக்கும் அந்த குக்கிராமத்தின் பெயர் மணத்தி.
சாதாரண ஏழை விவசாய குடும்பமான தந்தை பெருமாள், தாயின் மங்களம் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் கணேசன். இவருக்கு மொத்தம் நான்கு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உள்ளனர். அந்தக் காலத்தில் மணத்தியில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருந்ததால், மேல் படிப்புக்கு மூன்றரை கிலோமீட்டர் நடந்து சென்று கல்விகற்க வேண்டிய சூழல்தான் இருந்தது. தன்னுடைய 8 - 9 வயதில் கபடி விளையாடத் தொடங்கிய இவருக்கு, கபடி விளையாட்டில் ஊரின் பெயரே பின்னாளில் அடையாளமாக மாறிவிட்டது. பக்கத்து ஊர்களில் நடக்கும் சிறு சிறு போட்டிகளில் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடியதற்காக கிடைத்த வெகுமதி தான் இந்த அடையாளம்.
தொடக்கக் கல்வியை முடித்த இவர், அருகிலுள்ள புனித லூசியா நடுநிலைப் பள்ளியில் படித்து முடித்தார். பள்ளியில் ஓட்டப் பந்தயம் மற்றும் கபடிப் போட்டிகள் நடைபெறும் போது ஆர்வத்துடன் கலந்து கொண்டு பாராட்டுகளைப் பெறத் தொடங்கிய இவருக்கு தந்தையும் தாயாரும், இவருடைய விளையாட்டு ஆர்வத்திற்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. என் பெற்றோரின் ஆக்கமும் ஊக்கமுமே இன்றைய வெற்றிக்குக் காரணம் என்கிறார் கணேசன்.
நாலுமாவடி காமராஜ் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்த போது, ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், சாயர்புரம் ஹோப்ஸ் பள்ளியில் சேர்ந்து மீண்டும் படிப்பைத் தொடர்ந்தார் ணேசன். இந்தப் பள்ளியில் கபடி அணி இல்லாததால் ஹாக்கி விளையாட்டைக் கைக்கு கொண்டு வந்தார். இவரின் கட்டுமஸ்தான உடல் வாகைப் பார்த்த ஆசிரியர் ஒருவர் ஹாக்கி விளையாட்டில் கோல் கீப்பராக அறிமுகப்படுத்தினர்.
ஹாக்கி விளையாட்டில் பல பரிசுகளை வென்று, பள்ளிக்கு பெருமைச் சேர்த்த இவருக்கு மேலும் பல ஆசிரியர்களின் உதவிகளும் கிடைத்தது. ஆனால், ஹாக்கி விளையாட்டிற்கு நிறைய பணம் செலவிட வேண்டி இருந்ததால் ஹாக்கியைப் பாதியிலேயே கைவிட்டார். விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதில் பெரிதாக செலவு செய்ய வேண்டிய தேவை இருந்தது. அதே சமயம், இவரின் உடல் அமைப்பும் துடிதுடிப்பும் ஆசிரியர் தங்கராஜ் என்பவருக்கு மிகவும் பிடித்துப் போக, கபடி அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடினார். கபடி விளையாட்டில் எப்படியாவது இந்திய அளவில் ஒரு வீரரை உருவாக்கி விட வேண்டும் என்பதைக் கனவாக கொண்டிருந்தவர் ஆசிரியர் தங்கராஜ்.
இதனால் பெரும் சிரத்தை எடுத்து பயிற்சி அளித்து வந்த இவர் தான், கணேசனின் கபடிக்கு ஆஸ்தான குரு. இவரின் கபடி விளையாட்டை இன்னும் செழுமை படுத்த தன் கைப்பணத்திலிருந்து தினமும் 10 ரூபாயை செலவிட்டு வந்துள்ளார். 1991ல் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது மாநில பொங்கல் கபடி விளையாட்டில் பங்கேற்று வெற்றி பெற்றார். 16 - 17 வயதுக்குள்ளாகவே கபடியில் சிறப்பாக விளையாடிய இவருக்கு சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் நல்ல பெயர் கிடைத்தது. தன்னோடு சேர்த்து தன் ஊரையும் பெருமைப்படுத்தினார் மணத்தி கணேசன்.
பெரிய போட்டிகளில் அடுத்தடுத்து விளையாடி 18 வயதில் தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த கபடி வீரராக உருவெடுத்தார் கணேசன். இதனால் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது தமிழ்நாடு சீனியர் கபடி அணியில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. சிறிய மைதானம் கூட இல்லாத மணத்தி கிராமத்தில், அறுவடை முடிந்த வயல்வெளிகளில் கபடி விளையாடி வந்தவர். விவசாயம் முப்போகம் நடைபெறும் போது, இவரால் பயிற்சி எடுக்க முடியாத சூழல் இருந்தது. இதனால், பயிற்சி எடுப்பதற்காகவே அருகிலுள்ள குரும்பூர் என்ற கிராமத்திற்கு சென்று வந்துள்ளார். தினமும் காலையில் மணத்தியிலிருந்து குரும்பூர் வரை இரண்டு முறை ஓட்டப் பயிற்சி எடுத்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் தூரம் வெறும் காலிலேயே ஓடி விடுவார். கபடியில் மட்டுமல்ல 100 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் இவர் கெட்டிக்காரராக இருந்தார். இதையறிந்த உடற்கல்வி பயிற்சியாளர், தடகளப் போட்டிகளில் விளையாட அழைத்துள்ளார். ஆனால், இவருக்கு கபடி விளையாட்டு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
மேலும், கபடிக்குப் பயிற்சி எடுப்பதும் இது போன்று கடினமானது தான். டயரை இடுப்பில் கட்டிக் கொண்டு ஓடுவது, சாக்குப் பையில் மணலை நிரப்பி அதில் தலையை முட்டுவது என கடுமையான பயிற்சிகளை எடுத்துள்ளார். மண்ணிலும் புழுதியிலும் புரண்டு விளையாடிய இவருக்கு, உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு விடும். ஆனால், தலையில் மட்டும் அடி விழாமல் கவனத்துடன் விளையாடுவார். தலையில் ஒரு காயம் கூட இல்லை என்பதை பெருமையாக சொல்கிறார் இவர். சன் பேப்பர் மில் அணியில் விளையாடும் போதுதான், இவரின் காலுக்கு ஷூ கிடைத்தது. கபடிக்காக இவர் வாங்கிய பதக்கங்களும் பரிசுகளும் எண்ணில் அடங்காதவை.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நேரத்தில் தான் 1993 ல் தமிழ்நாடு மின் வாரியத்துறையில் விளையாட்டுப் பிரிவின் மூலமாக அரசு வேலையும் கிடைத்தது. வேலை கிடைத்தாலும், கபடியைக் இவர் கை விடவில்லை. கிட்டத்தட்ட10 ஆண்டுகள் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார். தொடர்ச்சியாக அகில இந்திய மின் வாரியத்துறை கபடிப் போட்டியில் 1995 ஆம் ஆண்டு வரை சாம்பியன் பட்டம் பெற்று வந்துள்ளார். 1994 ஆம் ஆண்டில், கபடியில் ஆசிய சாம்பியன் பட்டத்தையும் பெற்று அசத்தினார். ஆசியப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் 1995 ஆம் ஆண்டில் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கியது. இதன் மூலம், கபடி விளையாட்டுக்காக அர்ஜுனா விருது வென்ற இரண்டாவது தமிழக வீரர் இவரே.
இவருக்குப் பிறகு, தமிழகத்திலிருந்து எந்த வீரரும் கபடி விளையாட்டிற்காக அர்ஜுனா விருது வென்றதில்லை. தன்னுடைய உறவினரான மணத்தி கணேசனின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு இயக்குநர் மாரிசெல்வராஜ் திரைப் படைப்பாக எடுத்து வருகிறார் என்கின்றனர்.