
கூட்டுறவு சங்கத்தில் உரம் இல்லை என திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்த நிலையில், உடனடியாக கூட்டுறவு சங்கத்திற்கு ஆட்சியர் இளம்பகவத் முதல்வன் பட பாணியில் போனில் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (20.02.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதுநாள் வரை 28.33 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது.
தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 4.38 மெ.டன், சோளம் 1.02 மெ.டன், உளுந்து 5.99 மெ.டன்,கம்பு 2.74 மெ.டன் பாசிப்பயறு0.1 மெ.டன்,நிலக்கடலை 2.965 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 3680 மெ.டன் யூரியா, 2400 மெ.டன் காம்ப்ளக்ஸ், 1460 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 700 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பில் உள்ளது.
நடப்பு பிப்ரவரி, 2025 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 1340 மெ.டன் யூரியா, 2400 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 140 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் 850 மெ.டன் யூரியா 50 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 1150 மெ.டன் காம்ப்ளக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்கள் மூலம் 15.02.2025 வரை ரூ.250.35 கோடிக்கு 21846 விவசாயிகளுக்கு விவசாயபயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 16028 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.184.58 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல்வன் பட பாணியில் விசாரணை
மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உரம் இல்லை என திருப்பி அனுப்புவதாக விவசாய சங்க நிர்வாகி ஜெபராஜ் இஸ்ரவேல் தெரிவித்தார். உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அந்த சங்கத்திற்கு போன் செய்தார் சங்கத்தின் மேலாளர் ஜெபராஜ் போனை எடுத்தார்.
டிஏபி உரம் இருக்கிறதா? என்று கேட்டார். இருக்கிறது என்று பதில் கூறிய ஜெபராஜிற்கு அவருடன் போனில் பேசியது கலெக்டர் தான் பேசுகிறார் என்று தெரியாது. அப்படி என்றால் சுடலை குமார் என்ற விவசாயி டிஏபி உரம் வாங்க வந்துள்ளார் நீங்கள் உரம் இருப்பு இல்லை என்று சொல்லி உள்ளதாக புகார் தெரிவிக்கிறார் என்று கேட்டு, நான் கலெக்டர் பேசுகிறேன் என்றார்.
உடனே ஜெபராஜ், அலுவலக உதவியாளர் லட்சுமணன் தான் தவறாக சொல்லி இருக்கிறார் என்று கூற, லட்சுமணன் நிரந்தர பணியாளர் என்றால் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக பணியாளர் என்றால் இனிமேல் அவருக்கு இந்த பணி வழங்கக் கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
விவசாயி ஒருவர் பேசுகையில், கோவில்பட்டியில் உரம் பிடிபட்ட விஷயத்தில் 630 உரம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார். அதற்கு கலெக்டர் இது சம்பந்தமாக குற்ற பத்திரிகையின் தான் தெரிவிப்பார்கள் கோர்ட் விஷயத்தை வெளியில் விவாதிக்க முடியாது என்றார். ஆனால் மீண்டும் அவர் 630 உரம் எங்கிருந்து வந்தது என்பது தனக்கு தெரிந்தாக வேண்டும் என்றார். அப்போது கலெக்டர் இளம் பகவத் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்கிறார் என்று சினிமாவில் வரும் வசனத்தை குறிப்பிட்டதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.