• vilasalnews@gmail.com

தூத்துக்குடி : இரு வெவ்வேறு வழக்குகளில் 2 பேருக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்

  • Share on

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடுபுகுந்து தாக்கி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை ரூபாய் 10,000 அபராதம் மற்றும் மற்றொரு கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 10 வருட கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் விதித்து நேற்று ஒரே நாளில் இரு வழக்குகளில் திருச்செந்தூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


கடந்த 2004ஆம் ஆண்டு திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் புருஷோத்தமன் (60) என்பவரை தாக்கிவிட்டு அவரது வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சின்னப்பசாமி மகன் சங்கர் (எ) சங்கரன் (45) மற்றும் விருதுநகர் மாவட்டம் சந்திரன் மகன் ஜெயபால் (46) ஆகியோரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.


அதே போன்று கடந்த 2022ஆம் ஆண்டு திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே யாசகம் பெற்று அதே கோவிலில் சமையல் வேலை உதவியாளராக பணிபுரிந்து வந்த கும்பகோணம் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் வெங்கடேஷ் (58) என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் அதே கோவிலில் மற்றொரு சமையல் வேலை உதவியாளராக பணிபுரிந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சுரேஷ் (35) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.


மேற்படி வழக்குகளின் விசாரணை திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்குகளை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி செல்வபாண்டி, வீடுபுகுந்து தாக்கி நகைளை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி ஜெயபால் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் மற்றொரு குற்றவாளி சங்கர் (எ) சங்கரன் என்பவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை ரூபாய் 10,000 அபராதம் விதித்தும், கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி சுரேஷ் என்பவருக்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதமும் விதித்து நேற்று (19.02.2025) ஒரே நாளில் இரு வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கினார்.


இவ்வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர்கள் கந்தன் மற்றும் முரளிதரன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பாரிக்கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ஜென்சிமேரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்   பாராட்டினார்.

  • Share on

மக்களின் வரிப்பணம் வீணடிப்பு : தூத்துக்குடி மாநகராட்சிக்கு எழுந்த கண்டனம்!

விளாத்திகுளத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

  • Share on