
தூத்துக்குடி மாநகராட்சியில் சரியான திட்டமிடுதலோ தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, நெல்லை கோட்ட இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் க.பிரம்மநாயகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சியில் சரியான திட்டமிடுதலோ தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும், கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியின் முக்கிய போக்குவரத்து சாலையான தமிழ்ச்சாலை மற்றும் வ. உ. சி சாலையில் மழைநீர் வடிகால் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் அந்த மழைநீர் வடிகாலை மூடி விட்டு அதே சாலையில் புதிதாக நடைபாதை அமைக்கும் பணி பல கோடி ரூபாய் செலவில் நடைபெறுகிறது. இதனால் அரசு பணம் வீணாவதோடு அந்தச் சாலையில் உள்ள வியாபாரிகள் கடைகள் முன் கட்டியிருந்த படிகள் ஒவ்வொரு முறையும் இடிக்கப்பட்ட மீண்டும் கட்ட வேண்டிய இன்னலுக்கு ஆளாகின்றார்கள்.
அதேபோன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தென்பாகம் காவல் நிலையத்திலிருந்து தெற்கே திருச்செந்தூர் செல்லும் தேவர் புரம் சாலையில் கட்டப்பட்டுள்ள சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டது. அந்த சாலையின் மேல் பக்கம் அமைந்துள்ள நீதிபதிகள் குடியிருப்பு நீதிமன்ற கட்டிடங்கள் அரசு மருத்துவமனை வளாகம் முதலானவைகளில் தூத்துக்குடி நகரில் சிறிய அளவு மழை பெய்தாலும் தண்ணீர் கட்டி விடும் சூழ்நிலை உள்ளது சரியான திட்டமிடல் இன்றி பொறுப்பில்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கழக ஆட்சிகளில் இத்தகைய அவலங்கள் அரங்கேறுகின்றன. இனியாவது மாநகராட்சி கவனத்துடன் செயல்பட்டு பணவிரயத்தை தவிர்த்து மக்களுக்கு வேண்டிய வசதி செய்ய வேண்டும்.
மேலும், தூத்துக்குடியில் இருந்து பாரத் ரயில் இயங்க வேண்டும். தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் தினசரி இயங்க வேண்டும். அண்ணா பேருந்து நிலையத்தில் ஏற்கனவே அமைந்திருந்த பழமையான விநாயகர் கோவிலை மீண்டும் அமைக்க வேண்டும், பொது கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் இந்து முன்னணி மாநகர மாவட்ட துணை தலைவர் ஆதி நாத ஆழ்வார், மாவட்ட பொது செயலாளர் நாராயண ராஜ், மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலவேசம், கவி சண்முகம்,மாரியப்பன் உட்பட மண்டல தலைவர்கள், கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.