
தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் 100 வது நாளில், அப்பகுதி மக்கள் பலர் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். அப்போது பேரணியாகச் சென்ற பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்படவே அது கலவரமானது.
இந்தச் சம்பவத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சிபிஐ க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இந்த போராட்டத்தின் பின்னர் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை இது வரை திறக்கப்படவில்லை.
தமிழ்நாடு மக்களும், தமிழ்நாடு அரசும் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதற்கு சாத்தியம் இல்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதை தூத்துக்குடி மக்கள் விரும்பவில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், தமிழ்நாட்டில் பொருளாதார இழப்பு எதுவும் இல்லை. ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு உகந்த பகுதியாக தூத்துக்குடி மாறியிருக்கிறது என்கிறனர் உள்ளூர் மக்கள்.
இந்த நிலையில், சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்துவிட முடியுமா என்று பார்க்கிறது வேதாந்தா குழுமம். அதற்காக அவ்வப்போது தூத்துக்குடியில் தங்களுக்கு ஆதரவாக மக்கள் இருப்பதாக காட்டிக்கொள்ளும் வேலையில் அவ்வப்போது ஈடுபட்டுவருகிறது ஆலை தரப்பு.
இந்தநிலையில் தான், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆதராவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி எந்த விதமான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அறிவிப்பு, ஸ்டெர்லைட் ஆலை தரப்பிற்கு மேலும் ஒரு சறுக்கலை தந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தரப்பில் இன்று ( 20.2.25 ) வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆதராவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி எந்த விதமான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என மாவட்ட காவல்துறை அறிவித்து கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற உத்தரவுபடி தற்போது வரை ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. மேற்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆதராவாளர்களோ, பல்வேறு நலச்சங்கங்கள் மற்றும் பொதுமக்களோ ஒன்று கூடி எந்த விதமான ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.