
சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.53,748 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சார்ந்த பழனிச்சாமி என்பவர் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் தனக்கு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால் திருநெல்வேலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு சிகிச்சைக்கான முழு தொகையையும் செலுத்தியுள்ளார்.
பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செலுத்திய பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு பகுதி தொகையை மட்டும் கொடுத்து விட்டு மீதித் தொகையை சரியான காரணங்களை கூறாமல் தர மறுத்துள்ளது.
இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட தொகையில் எதிர்தரப்பினர் ஏற்கனவே செலுத்திய தொகை போக மீதித் தொகையான ரூ.43,748 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.5,000, வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.53,748 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.