
தூத்துக்குடி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ( பிப்.,18 ) நடைபெற்றது. கோட்டாட்சியர் பிரபு தலைமை வகித்தார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில்:-
தூத்துக்குடி அருகே உள்ள சிறுபாடு பகுதியில் வடிகால் அடைக்கப்பட்டிருப்பதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். சிறுபாடு குளத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அதனை அகற்றவும், குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலங்கரை பகுதியில் குளம் உடைப்பு ஏற்பட்டு வயல்களை தண்ணீர் அரித்து செல்கின்றன. இதில் ஏற்பட்ட பள்ளத்தை விவசாயிகள் மூட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குளத்திலிருந்து மண் எடுத்து வயலில் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்ப வேண்டும். மருதூர் மேலக் காலில் செய்துங்கநல்லூரில் உள்ள அழுதா ஓடை மூலம் சுமார் 200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஓடை வருவாய் கணக்கில் இல்லை. இதனை கணக்கில் கொண்டு வர வேண்டும். இந்த ஓடையை தூர்வார வேண்டும். ராமானுஜம் புதூர் சாத்தனேரி குளத்துக்கு தனி கால்வாய் அமைத்து மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும்.
கருங்குளம் வட்டாரத்தில் உள்ள ராசாங்குளத்தில் முப்புதர்கள் உள்ளது. இதில் பன்றிகள் தங்கி உள்ளது. இந்த முட்புதர்களை அகற்றி பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மையில்கள், மான்களும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அதனை கட்டுப்படுத்த வேண்டும்.
ராசாங்குளத்தில் இரண்டு மலை பாம்புகள் இருப்பதாக தெரிகிறது அந்தப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆட்டுக்குட்டிகளை மலைப்பாம்புகள் பிடித்து விழுங்கி விடுகின்றன இந்த பாம்புகளைப் பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
இதற்கு பதில் அளித்து கோட்டாட்சியர் பிரபு பேசுகையில்:-
சிறுபாடு பகுதியில் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுபாடு குளத்தில் குப்பைகள் அகற்றவும், ஆக்கிரமிப்பினை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும. காலங்கரை பகுதியில் வேளாண் பொறியியல் துறை மூலம் வயலில் உள்ள பள்ளத்தை நிரப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும். அழுதா ஓடை குறித்து நேரில் ஆய்வு செய்து வருவாய் கிராம கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராசாங்குளத்தில் விவசாயிகளுக்கு மண் தேவைப்பட்டால் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் குளம் தூர்வாரப்படும். அதே போன்று முட்புதர்களை அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குளத்தில் உள்ள பாம்புகள் குறித்து வனத்துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
கோவில்பட்டி
கோவில்பட்டி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை வகித்தார். தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் பேசுகையில்:-
எட்டயபுரம் வட்டம் வெம்பூர், கீழக்கரந்தை, மேலக்கரந்தை, பட்டி தேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு சிப்காட் திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ளது. இதனால் முழுமையாக விவசாயம் பாதிக்கப்படும். இந்தத் திட்டத்தை ரத்து செய்து அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ள வேறு பகுதிகளில் சிப்காட் அமைக்க வேண்டும்.
சூரங்குடி பகுதியில் உள்ள காலாங்கரையை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும். வேம்பார் - பருவக்குடி சாலையில் சூரங்குடி அருகே வெள்ளம் தேங்குவதை தடுக்க புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும். இதன் மூலம் குரங்குடி, தங்கம்மாள்புரம், குமாரசக்கனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்.
எட்டயபுரம் - விளாத்திகுளம் சாலையில் பிள்ளையார்நத்தம் முதல் விளாத்திகுளம் வரும் வழியில் விவசாய விளைநிலங்களில் வெள்ளநீர் தங்குவதை தடுக்க நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம் கமலாபுரம், பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் நீர் தேங்குவது தடுக்கப்படும்.
கடந்தாண்டு பெய்த கனமழையின் காரணமாக முழுமையாக சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு மாவட்ட அளவில் வேளாண் பயிர்களுக்கு சுமார் ரூ.59 கோடியும், தோட்டக்கலை பயிர்களுக்கு சுமார் ரூ.16 கோடி யும் கேட்டு அரசுக்கு பரிந்துரைப்பதாக தூத்துக்குடியில் நடந்த கடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். அந்த வெள்ள நிவாரணத்தை அரசிடமிருந்து விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2023- 24ம் ஆண்டுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு விடுபட்ட பயிர்களான வெங்காயம், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயி ராஜசேகர் பேசுகையில்:-
கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கேட்டு அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை உடனடியாக பெற்று விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்க வேண்டும். முற்றிலும் பயிர்கள் சேதமடைந்து விட்டதால், 5 ஆண்டு சராசரி கணக்கெடுப்பதை காப்பீட்டு நிறுவனங்கள் கைவிட்டு, விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். வைப்பாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். காட்டுப்பன்றிகள் சம்பந்தமாக அரசின் அறிவித்துள்ள வழிமுறைகளின்படி தனிக்குழு அமைக்க வேண்டும் என்றார்.
புதூர் ஒன்றிய மதிமுக செயலாளர் ராஜ்குமார் பேசுகையில்:-
காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும் சீமைக்கருவேல மரங்களை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்:-
விளாத்திகுளம் எட்டயபுரம் வட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் சிப்காட்டை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். அரசு மானியம் பெற நிலங்களின் பட்டாக்களை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தனிப்பட்ட இருப்பவர்கள் ஆதாருடன் இணைத்து வருகின்றனர். ஆனால் முன்னோர் பெயரிலும் கூட்டு பட்டாக்களை ஆதாருடன் இணைக்க முடியவில்லை. இதனால் மானியம் பெறுவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் 10 ஏ பட்டா வழங்க சிறப்பு முகாம் நடத்தி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்ப டும் என கோட்டாட்சியர் மகாலட்சுமி தெரிவித்தார்.
திருச்செந்தூர்
இதேபோன்று, திருச்செந்தூர் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. கோட்டாட்சியர் சுகுமாறன் தலைமை வகித்தார். திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். இதற்கு கோட்டாட்சியர் பதிலளித்து பேசினார். வேளாண்மை, வேளாண் பொறியியல், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.