
ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 20 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த வழக்கில் சார்பதிவாளர் உட்பட ஏழு பேர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு -|| ( நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ) போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, கீழமங்கலம் கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் புன்செய் நிலங்கள் ராமசுப்பா நாயக்கருக்கு பாத்தியப்பட்டு அவர் ஆண்டு அனுபவித்து, அவருடைய ஆயுளுக்கு பிறகு அவருக்கு நேரிடை வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அவருடைய இரண்டாம் நிலை வாரிசுகளான ராமசுப்பா நாயக்கர் உடன்பிறந்த சகோதர்களான திருவடிசாமி, காசிபெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர்களின் வாரிசுகள் வாய் மொழியாக பாகப்பிரிவினை செய்து விவசாயம் செய்து அனுபவித்து வந்துள்ளனர்.
ராமசுப்பா நாயக்கர் 22.11.1997 ஆம் தேதியில் இறந்தார் என்பதற்கு இறப்புசான்றிதழ் ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலக சார்பதிவாளரால் 13.06.2022 அன்று கையொப்பம் செய்யப்பட்டு ராமசுப்பா நாயக்கரின் சகோதரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வாய் மொழியாக பாகப்பிரிவினை செய்து விவசாயம் செய்து அனுபவித்து வந்த சுமார் 20 ஏக்கர் விவசாய நிலத்தை தங்களுக்குள் முறையாக பாகப்பிரிவினை ஆவணம் பதிவு செய்ய வேண்டி கடந்த 2022 ஆம் ஆண்டு முயற்சி செய்து அதற்கான வேலைகளை சகோதரர்களின் வாரிசுகள் செய்தபோது 20.08.2022 ஆம் தேதியில் ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது பெரியப்பா ராமசுப்பா நாயக்கர் இறந்து 25 வருடங்கள் ஆன நிலையில் அவர் பெயரில் அவருடைய முகவர் என்று ஒரு நபர் ஆவண எண்.2340/2022 ஆக போலியாக ஆள்மாறாட்டம் மூலமாக பத்திரம் பதிவு செய்யப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன் பிறகு மேற்படி போலியான பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை அவர்கள் நகல் எடுத்து பார்த்த போது, போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள கிரைய ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ள கணினி பட்டாவில் தங்களுடைய பெரியப்பா ராமசுப்பா நாயக்கரின் தந்தை பெயர் அழகிரிசாமி என்பதற்கு பதிலாக அழகிரி என்று தவறுதலாக உள்ளதை பயன்படுத்தி தங்களுக்கு சொந்தமான சொத்தினை மன்மதராஜன் என்ற நபர் ராம்சுப்பு நாயக்கர் என்ற நபரின் பெயரில் தென்காசி சார்பதிவாளர் அலுவலக ஆவண எண்.2520/2019 -ன் படி ஒரு போலியான பவர்பத்திரம் தயார் செய்து அவருடைய மகன் செந்தில்குமார் என்பவரின் மனைவி கலைவாணி என்பவருக்கு ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலக ஆவண எண். 2340/2022 ஆக 24.08.2022 தேதியில் கீழமங்கலம் கிராமத்தில் ராமசுப்பா நாயக்கருக்கு சொந்தமான சுமார் 20 ஏக்கர் சொத்தை மோசடியாக ஒரு போலியான கிரைய ஆவணம் பதிவு செய்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.
ஆள்மாறாட்டம் செய்து எங்கள் சொத்தினை போலி பத்திரப்பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் வாரிசுகள் முறையிட்ட போது, விசாரணையில் காவல் நிலைய அதிகாரிகள் இரண்டாம் நிலை வாரிசுகளான உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறிவிட்டனராம். அதன்பின் ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ராமசுப்பா நாயக்கருக்கு அவருடைய உடன்பிறந்த சகோதரர்கள் வாரிசுகள் தான் வாரிசுதாரர்கள் என தீர்ப்பு பெற்று அதன் பெயரில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பம் செய்து அதில் கடந்த 17.08.2024 அன்று தங்களது பெயருக்கு வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் 4 நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்து எங்கள் சொத்தினை போலி பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுமாறு வழக்கு தாக்கல் செய்து, ராமசுப்பா நாயக்கர் வாரிசுகளில் ஒருவரான பிருந்தா என்பவர் பெற்ற நீதிமன்ற ஆணையின் அடிப்படையில்,
கோவில்பட்டியைச் சேர்ந்த அழகிரி மகன் ராம்சுப்பு மற்றும் செந்தட்டி மகன் மன்மதராஜன், மன்மதன் ராஜன் மகன் செந்தில்குமார், செந்தில்குமார் மனைவி கலைவாணி, சங்கப்பா மகன் செந்தட்டிகாளை, முத்து தினேஷ், ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் மனோகரன் உள்ளிட்ட 7 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு -|| ( நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் செந்தட்டிகாளை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு -|| ( நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ) போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.