விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கலந்துகொண்டு, 3019 பயனாளிகளுக்கு ரூ.11.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் வட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விளாத்திகுளம் அக்கம்மாள் திருமண மண்டபத்தில் இன்று (20.02.2021) நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கலந்துகொண்டு, 3019 பயனாளிகளுக்கு ரூ.11.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் , மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது :
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று அவற்றின்மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில் இன்று விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு வருவாய் துறை மூலம் ஆக்கிரமப்பினை வரைமுறைப்படுத்தி இலவச வீட்டுமனைப்பட்டா 1173 நபர்களுக்கும், இலவச வீட்டுமனைப்பட்டா 134 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா 355 நபர்களுக்கும், பட்டா மாறுதல் 350 நபர்களுக்கும், முதியோர் உதவித்தொகை 383 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 49 நபர்களுக்கும், மகளிர் திட்டத்தின் மூலம் அம்மா இருசக்கர வாகனம் 17 நபர்களுக்கும், திருமண உதவித்தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 472 நபர்களுக்கு தலா 8 கிராம் தங்கம், ரூ.3 கோடியோ 66 லட்சத்து 30 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 87 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான சுழல்நிதியும் ஆக மொத்தம் 319 பயனாளிகளுக்கு ரூ.11,31,41,175 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
விளாத்திகுளம், புதூர் பகுதி மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ள பகுதி. இப்பகுதியில் சோளம், கம்பு, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அதிகமான பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பயிர் சேதம் குறித்து வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு பயிர்களுக்கு காப்பீடு தொகை மற்றும் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நமது மாவட்டத்தில் வேளாண்மை பயிர்கள் 1,04,000; எக்டேரும், தோட்டக்கலை பயிர்கள் 17,000 எக்டேர் என கணக்கெடுப்பு செய்யப்பட்டு 1, 21,000; எக்டேர் பயிர் சேதத்திற்கு ரூ.76 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் புதூர், விளாத்திகுளம் பகுதிகளுக்கு மட்டும் 35700 எக்டேருக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயிர் காப்பீடு தொகை முதல்கட்டமாக நமது மாவட்டத்தில் ரூ.16 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் மேலும் ரூ.46 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் பெறப்பட்டுள்ள பயிர் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள். அதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.181 கோடி தள்ளுபடி பெறப்பட்டுள்ளது. இதில் விளாத்திகுளம் பகுதிக்கு ரூ.17 கோடியும், புதூர் பகுதிக்கு ரூ.25 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை பெறப்பட்டுள்ளது. விரைவில் பத்திரங்கள் வழங்கப்படும். மேலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய திட்டங்களும் செயல்படுத்தப்படும் என பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், ஒன்றியக்குழு தலைவர்கள் முனியசக்திராமச்சந்திரன் (விளாத்திகுளம்), சுசீலாதனஞ்ஜெயன் (புதூர்), மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் நடராஜன், ஞானகுருசாமி, வட்டாட்சியர்கள் அய்யப்பன் (எட்டயபுரம்), ரகுபதி(விளாத்திகுளம்), விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.