
எட்டயபுரம் அருகே உள்ள கசவன் குன்று கிராமத்தில் கதிரடிக்கும் இயந்திரம் மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கசவன் குன்று வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி ( 48 ) விவசாயியான இவர், இவரது விவசாய நிலத்தில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் நடந்து வந்தது. இதற்காக அவர் கள்ளக்குறிச்சியில் இருந்து கதிரடிக்கும் இயந்திரத்தை வாடகைக்கு வரவழைத்து பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
கதிரடிக்கும் இயந்திரத்தை கள்ளக்குறிச்சி புது வீட்டு தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் அழகு வேல் ( 30 ) என்பவர் ஓட்டினார். இந்த நிலையில், நேற்று மாலையில் அறுவடை பணியின் போது அழகுவேல் இயந்திரத்தை பின்னோக்கி இயக்கி உள்ளார். அப்போதே எதிர்பாராத விதமாக அங்கு நின்றிருந்த கருப்பசாமி மீது இயந்திரம் மோதியதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி உயிரிழந்தார்
இது குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து டிரைவர் அழகுமுத்துவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.