
தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கேமராக்கள் பொருத்தப்பட்ட கார் மூலம் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பை வழங்க வேண்டுமென தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளது.
இந்த நிலையில், தென்பாகம் காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, இராஜாஜி பூங்கா, பிரபல ஜவுளிக்கடைகள், நடைபாதை கடை வீதிகள், போக்குவரத்து சிக்னல் என அனைத்தும் சுற்றி அருகருகே அமைந்த, பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய மிகவும் பரபரப்பான தூத்துக்குடி - பாளையங்கோட்டை பிரதான சாலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது.
நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்பாக வந்து செல்லக்கூடியவர்கள், அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வோர், பண்டிகை, விஷேசங்களுக்கு புதுத்துணி எடுக்க ஜவுளிக்கடைக்கு வருவோர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்கள் அதிகமாக வந்து செல்லக்கூடிய இடமாக தூத்துக்குடி நீதிமன்றம் அமைந்துள்ள சாலை உள்ளது.
ஆகவே, தூத்துக்குடியில் அப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட கார் நீதிமன்ற பணி நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது . இந்த காரில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொண்டே போலீசார் செல்வார்கள். இதில் சந்தேகப்படும்படியான நபர்கள் தெரிந்தால் அவர் மீது உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.