• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் களம் இறங்கும் புதிய பெண் அரசியல் தலைவர்!!

  • Share on

பெரும்பாலான நல்ல அரசியல் பார்வையாளர்கள் ஆளுமை மிக்க நல்ல அரசியல் தலைவர்களாக ஆவதில் பெண்களும் ஆண்களும் சமம் தான் என்கின்றனர். அதே வேளையில் ஆண்களை விட பெண்கள் தான் சிறந்த அரசியல் ஆளுமை தலைவராக ஆகிறார்கள் என்பது நிசர்சனமான உண்மை.


இந்தியப் பெண்கள் இதுவரை மாநில முதலமைச்சர்களாகவும், இந்திய அமைச்சர்களாகவும், பிரதமராகவும் இருந்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டில் ஒரு நாட்டிற்குத் தலைமை தாங்கிய 2வது பெண்மணியாக இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இருந்துள்ளார். இருந்தாலும், பெண்களின் அரசியல் ஈடுபாடும் பங்கேற்பும் குறைவாகவே உள்ளது. 


இந்தியாவின் பல பெண் தலைவர்கள், பணக்காரர்களாகவும், உயர் சாதியினர் அல்லது பாரம்பரிய அரசியல் குடும்பங்களின் வாரிசுகளாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் வாழ்வைத் தொடங்குவதற்கான சலுகை ஏராளமாக இருக்கிறது. ஆனால், சாதாரண பெண்களுக்கு, அரசியல் என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


அரசியல்வாதிகள் தங்கள் மீதான தனிப்பட்ட நம்பகத்தன்மையை நிலைநாட்ட, குறிப்பிட்ட தொகுதி மக்களுடன் நல்லவிதமான தொடர்புகளை உருவாக்க வேண்டும். இந்த வாய்ப்புகள் ஆண்களை போல பெண்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை என்ற போதிலும், அந்த நிலை ஒரு பெண்களின் அரசியலில் பெறுகிறார் என்றால் அது அவரின் தனிப்பட்ட ஆளுமை பண்பின் பிரதிபலிப்பே.


உட்கட்சியில் பெண்களுக்கு பொறுப்பு வழங்குவதில் பாகுபாடுகள், பெண்களின் கருத்துகளைப் புறந்தள்ளுவது, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பெண்கள் இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படாமல் ஓரங்கட்டப்படுவது, கட்சி மேடைகளில் பேசுவதற்கு இடம் தராதது, பொதுக் கூட்டங்களில் பிரசாரங்களில் கூட்ட நெரிசலில் உடலியல் துன்புறுத்தல்கள், பாலியல் சீண்டல்கள், மிரட்டல்கள் என பல்வேறு சவால்களையும் தாண்டியே பெண்கள் அரசியலில் தங்கள் இருப்பை நிலை நிறுத்தி வருகின்றனர்.


தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரி கனிமொழியிடம் சுமூகமான உறவுடன் இருப்பது, அவர் மீதான தன் அன்பை பல தருணங்களில் வெளிப்படுத்தி வருவது போன்றவை இருந்தாலும், கடந்த ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்த கனிமொழி, தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.


கட்சியில் அடுத்த தலைவராக உதயநிதி ஸ்டாலின் உயர்த்தப்படும் போது, அவரைவிட மூத்த தலைவரான கனிமொழி, தூத்துக்குடி தொகுதிக்கும் டெல்லிக்கும் என தன்னை சுருக்கிக் கொள்ள வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளது. 


தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பெண்களின் அரசியல் முகமாக பார்க்கப்படுவது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கீதாஜீவனும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் தான். இவர்கள் தங்கள் அரசியல் வாழ்வில் தங்களை அர்பணித்து கொண்ட விதம், தியாகம், போராட்டம், இழப்பு என எதையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதே வேளையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் மாவட்ட செயலாளரின் மகளாக இல்லாமல் இருந்திருந்தால் கீதாஜீவனும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளாக, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரியாக கனிமொழி இல்லாமல் இருந்திருந்தால் கனிமொழியும் தற்போதைய நிலைபோல் அரசியலில் கோலோச்சி இருப்பார்களா என்பது சந்தேகமே.


இவர்களை போல தூத்துக்குடி பெண் அரசியல் முகமாக ஜெயலலிதாவால் ஒரு கட்டத்தில் அடையாளம் காட்டப்பட்ட தூத்துக்குடி முன்னாள் மேயரும், முன்னாள் எம்பியும், தற்போதைய பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அரசியலில் பிரகாசிக்காததிற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், குறிப்பிட வேண்டிய காரணம் என்றால், சசிகலா புஷ்பா பாரம்பரிய அரசியல் குடும்பங்களின் வாரிசாக இல்லாமல் போனதுதான்.


இத்தகைய சூழலில், தமிழக அரசியலில் புது வரவாக வந்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்து, தூத்துக்குடி அரசியலின் பெண் முகமாக தன்னை நிலைநிறுத்த தனியொரு பெண்ணாக போராடி வருகிறார் அஜிதா ஆக்னல். தமிழக வெற்றிக்கழகத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு முழுமையாக அதிகாரபூர்வமாக செயலாளர்கள் அறிவிக்கப்படாததால், அப்பொறுப்பினை பெறும் போட்டியில் மாவட்டத்தில் நிர்வாகிகள் சில அணிகளாக பிரிந்து அரசியல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அரசியலில் சகஜம் தான். ஆனால் அதே வேளையில் அஜிதா ஆக்னல் ஒரு வேளை தூத்துக்குடி மாவட்ட செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதன் பின்பும் கோஷ்டி அரசியல் தொடர்ந்தால், அரசியலில் பெண் வரக்கூடாது என்ற ஆணாதிக்க மனோபாவமாகவே அதை பார்க்க கூடும். அரசியல் பின்புலம் இல்லாத ஒரு பெண் தன்னை அரசியலில் அடையாளப்படுத்தினால் அவர் மீது நடத்தப்படும் ஆணாதிக்க தாக்குதலாகவே அத்தகைய கோஷ்டி பூசலை பார்க்கக்கூடும்.


சொந்த வாழ்க்கையின் சோகங்களை எல்லாம் மறுந்து இந்த மண்ணுக்காக வாள் ஏந்தியும், வேல் ஏந்தியும் போர்க்களம் புகுந்த ஆணை காட்டிலும், வீரமான வீரப்புரட்சியாளர்  வேலுநாச்சியார். முன்னேற துடிக்கும் சமூகத்தில் பிறந்து, இந்த மண் பின் தங்கிவிடக்கூடாது என்பதற்காக அதற்காக பாடுபட்டவர். சொத்தை இழந்தாலும், சுயநலம் பார்க்காமல், இந்த மண்ணுக்காக இந்திய சுதந்திர போராட்டத்தில் களம் இறங்கி போராடிய அஞ்சலை அம்மாள் ஆகிய இரு பெரும் பெண்களை கொள்கை தலைவராக கொண்டு, பெண்களை கொள்கை தலைவராக ஏற்று களத்திற்கு வரும் முதல் கட்சியாக சிலாகித்து கொள்ளும்  தவெகவும் அதன் தலைவருமான விஜய், 


பணக்காரர்களாகவும், உயர் சாதியினர் அல்லது பாரம்பரிய அரசியல் குடும்பங்களின் வாரிசுகளாகவும் இல்லாமல் அதிகார அரசியல் மையத்தில் தன்னை அடையாளப்படுத்தப் போராடி வரும் தூத்துக்குடி அஜிதா ஆக்னலை தவெகவின் தூத்துக்குடி முகமாக அடையாளம் காட்டுவாரா? தூத்துக்குடி அரசியலின் மற்றுமொரு பெண் அரசியல் முகமாக அஜிதா ஆக்னல் வெளிச்சம் பெறுவாரா? என்ற கேள்விக்குள் நிற்கிறது தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய பெண் ஆளுமையின் அரசியல்.

  • Share on

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் கவனத்திற்கு இது!

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

  • Share on