
ஏரல் தாலுகா பகுதி அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று ( பிப்., 17 ) முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து ஏரல் தாசில்தார் செல்வகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனை அற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரப்பு செய்து வீடு கட்டி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவர்களிடம் மனுக்கள் பெற்று, தகுதியின் அடிப்படையில் ஆக்கிரமிப்பினை வரைமுறைப்படுத்தி பட்டா வழங்கிட குறுவட்ட வாரியாக ஏரல் தாலுகா பகுதிகளில் முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட குறுவட்ட பகுதிகளான, ஆறுமுகமங்கலம், ஆழ்வார்திருநகரி, மற்றும் பெருங்குளம் குறுவட்டத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகத்தில் இன்று ( பிப்., 17 ) முதல் அலுவலக வேலை நேரங்களில் பட்டா பெறுவதற்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் நில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தகுதியின் அடிப்படையில் வரன்முறை பட்டா வழங்கப்படும்.
எனவே, ஆட்சேபனை அற்ற நத்தம் புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்கள் வீட்டு தீர்வை ரசீது, மின் இணைப்பு ரசீது, ஆதார் அட்டை மற்றும் மின்னணு குடும்ப அட்டை, பதிவு பெற்ற கிரைய ஆவணங்கள் ஏதும் இருப்பின் அவற்றின் நகல் ஆகியவற்றோடு விண்ணப்பம் செய்து பட்டா பெற்றுக் கொள்ளலாம் என ஏரல் தாசில்தார் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.