• vilasalnews@gmail.com

அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு குட்நியூஸ்!!

  • Share on

புறம்போக்கு நிலங்கள் என்பது அரசுக்கு சொந்தனமானதாகும். பிரிட்டிஷ் ஆட்சியின்போது, விளைநிலம் ஆக்கப்படாத இடத்தை ஏரிகுளம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட மற்றும் பொதுவாக அனைவரும் உபயோகிப்பதால் புறம்போக்கு நிலம் என்றும் சொல்வார்கள். இதில், தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, வாய்க்கால், சாலை, இடுகாடு இப்படி அனைத்துமே பொதுப்பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு நிலங்களில் அடங்கும்.


புறம்போக்கு நிலங்கள் என்றாலும் இதில் நிறைய வகை உண்டு. குறிப்பாக, நத்தம் என்பதில் மட்டும், மக்கள் வீடு கட்டிக்கொள்ள அனுமதி உண்டு. இதை அரசாங்கமே வழங்கும். இதற்கு முறையான ஆவணங்களும் உண்டு. ஆனால், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மற்ற புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டிக்கொள்ளக்கூடாது.


இப்படிப்பட்ட சூழலில் தான், கடந்த 2018ஆம் ஆண்டு, புறம்போக்கு நிலத்திற்கும் பட்டா வாங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதாவது, புறம்போக்கு நிலத்தை 5 வருடங்களுக்கு மேல் வைத்திருந்தால் அந்த நிலத்தை உரிமை கொள்ளலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


தமிழகம் முழுவதும் புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் பொதுமக்கள், அரசு பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தபடியே இருந்தனர். இதையடுத்து தான், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்பு நிலங்களை வரைமுறைப்படுத்துவதற்கான நெறிமுறைகளும் எடுத்துரைக்கப்பட்டது.


அதன்படி, அரசுக்கு தேவையில்லாத புறம்போக்கு நிலத்தில் தங்கியிருந்தால், அவர்கள் பட்டா பெறுவதற்குத் தகுதியானவர்கள் ஆவர். அனைத்து விதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்து விட்டு, பிற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் இந்தத் திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் ஆவர்.


எனவே, இவர்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தை வரைமுறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். இந்த புறம்போக்கு நிலத்தில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் மற்றும் ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்று 2 வகைகள் உள்ளது.


ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் என்பது ஊரில் உள்ள கிராம நத்தம் நஞ்சை, தரிசு, புஞ்சை ஆகியவையாகும். இதில் கிராம நத்தம் என்பதில், பட்டவை பெறுவதற்கு அரசிடம் விண்ணப்பிக்கலாம். ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்பது குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய், மயானம், காடு, தோப்பு, இங்கெல்லாம் நிலத்தை வாங்கவே முடியாது. அனுமதியும் கிடைக்காது.


கயத்தாறு தாலுகா பகுதி அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம்


கயத்தாறு தாலுகா பகுதி அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம் கயத்தாறு குறுவட்டங்களில் 4 நாட்கள் நடக்கிறது.


கயத்தாறு குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனை அற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரப்பு செய்து வீடு கட்டி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவர்களிடம் மனுக்கள் பெற்று, தகுதியின் அடிப்படையில் ஆக்கிரமிப்பினை வரைமுறைப்படுத்தி பட்டா வழங்கிட குறுவட்ட வாரியாக கயத்தார் தாலுகா பகுதிகளில் முகாம் நடத்தப்படுகிறது. 


அதன்படி, கயத்தாறு தாலுகாவிற்கு உட்பட்ட குறுவட்ட பகுதிகளான, கடம்பூரில் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதியும், காமநாயக்கன்பட்டியில் 18ஆம் தேதியும், கயத்தாறு பகுதியில் 19ஆம் தேதியும், செட்டிக்குறிச்சியில் 20ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்கள் குறுவட்டத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகத்தில் மேலே குறிப்பிட்டுள்ள தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மனு செய்து பயன்பெறலாம்.


ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்கள் வீட்டு தீர்வை ரசீது, மின் இணைப்பு ரசீது, ஆதார் அட்டை மற்றும் மின்னணு குடும்ப அட்டை, பதிவு பெற்ற கிரைய ஆவணங்கள் ஏதும் இருப்பின் அவற்றின் நகல் ஆகியவற்றோடு விண்ணப்பம் செய்து பட்டா பெற்றுக் கொள்ளலாம் என கயத்தாறு தாசில்தார் சுந்தர ராகவன் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி அருகே முன்விரோதத்தில் ஒருவர் வெட்டி படுகொலை!!

குறும்படம் எடுத்து பரிசை வாங்க ரெடியா தூத்துக்குடி மக்களே!!

  • Share on