
தூத்துக்குடி அருகே தெற்குசிலுக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு வடக்கத்தி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, கிராம மக்கள் மற்றும் தினேஷ் பாசறை இளைஞர் அணி சார்பில் மூன்றாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.
தெற்குசிலுக்கன்பட்டி - மேலத்தட்டப்பாறை சாலையில் சின்ன மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என்று இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவதாக நடந்த சின்ன மாட்டு வண்டியில் 12 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போக வர 6 மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில், முதலாவது பரிசை செக்காரக்குடி வெற்றிமாறன் வினீஸ் முத்து, மேலமீனாட்சிபுரம் ஈஸ்வரி அம்மன் துணை முத்துஈஸ்வரி, இரண்டாவது பரிசை கடம்பூர் இளையஜமீன்தார் எஸ்விஎஸ்கே கருணாகரராஜா, மூன்றாவது பரிசை சீவலப்பேரி சுப்பையாபாண்டியன் நினைவாக ஸ்ரீதுர்காம்பிக்கை, ஆனந்த் வள்ளியூர், நான்காவது பரிசை சீவலப்பேரி சுப்பையாபாண்டியன் நினைவாக ஸ்ரீதுர்காம்பிக்கை ஆகியோரது காளைகள் தட்டிச்சென்றன.
இப்போட்டியைக் காண தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை நெடுகிலும் இருபுறங்களில் நின்று கைதட்டி ஆரவாரமிட்டு மாட்டு வண்டி வீரர்களையும், காளைகளையும் உற்சாகப்படுத்தினர்.