
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களை நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜகவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் யூ.ஜி.சி. பரிந்துரை செய்த ஊதியத்தை கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளா்கள் வைப்புநிதி பிடித்தம், மருத்துவ காப்பீடு, மகப்பேறு விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கௌரவ விரிவுரையாளா்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜகவினர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். மேலும், கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பெற்றுக்கொண்ட பாஜகவினர், இதனை தங்களது மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கொண்டு சேர்த்து, உங்களின் கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்க நாங்கள் பாடுபடுவோம் என உறுதியளித்தனர்.
இதில், தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் சேது ராஜ், மண்டல் தலைவர் சிவபெருமாள், மண்டல் பொதுச் செயலாளர்பெஞ்சமின் பாண்டியன் மற்றும் மண்டல் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்