
நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு த.வெ.க ஆதரவு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2 வது நாளாக கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக த.வெ.க மாநில கொள்கைப்பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் தலைமையில் கட்சியினர் நேரடியாக கல்லூரிக்கு சென்று கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், இதில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் பேசிய போது, "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரிடம் கொண்டு சென்று, தமிழ்நாடு அரசு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதற்கு தமிழக வெற்றி கழகம் தங்களுடன் இணைந்து போராடும் என்று தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலா, கட்சி நிர்வாகிகள் வீரபாண்டி மகேஷ், ஆரோக்கியராஜ், செந்தில்குமார், வினோத் கண்ணன், சித்ரா, கௌதமி, செண்பகக்கனி, பொன்காசிராம், அருள் ராஜா, கபாலீஸ்வரர், ராமகிருஷ்ணன், சந்திரன், சண்முகராஜ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு த.வெ.க-வின் ஆதரவு தெரிவித்தனர்.