
தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழிக்க பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாரந்தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. முகாமில் பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெற்றார்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-
தமிழக முழுவதும் முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாநகராட்சி பகுதிகளில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களில் வாரந்தோறும் புதன்கிழமை முகாம் நடந்து வருகிறது.
இதில் ஆரம்பத்தில் அதிக அளவு மனுக்கள் வந்தாலும் தற்போது குறைந்த அளவுகள் மனுக்கள் வருகின்றது. காரணம் இங்கு கொடுக்கப்படும் மனுக்களுக்கு நாம் உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறோம். மேலும், குடிதண்ணீர், சாக்கடை வசதி, இறப்பு, பிறப்பு சான்றிதழ் உள்பட அடிப்படை வசதிகளுக்கான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. சாலை வசதிகள் ஏறக்குறைய மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள சாலைகள் போடுவதில் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிற மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரோடுகளும் போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
தூத்துக்குடி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதியில் தினசரி 180 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில், பிளாஸ்டிக் பைகள் தான் அதிக அளவு வருகிறது. பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்னும் பொதுமக்கள் அதிகளவில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தி வருகிறார்கள். தற்போது பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், குப்பைகளை கண்ட இடங்களில் போடுவதை தடுக்கும் விதமாக 427 இடங்கள் போன ஜனவரி 2024 ல் கண்டறியப்பட்டு தற்போது 120 இடங்களாக குறைக்கப்பட்டு வருகிறது. இதுவும் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடியை பசுமையாக்கும் திட்டத்தில் இதுவரை மாநகரில் 5 லட்சம் மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் தங்களது வீடுகளுக்கு முன்பு மரங்கள் வளர்க்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.