
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை 6ஆம் தேதி மற்றும் 7ஆம் தேதி நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வருகை தருகிறார். இதற்காக அவர் நாளை காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு காலை 11 மணிக்கு வருகை தருகிறார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் ஆகியோர் வரவேற்பு அளிக்கின்றனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் திருநெல்வேலி புறப்பட்டு செல்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.