
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு கோழிகளை பலியிட வேண்டும் என இஸ்லாமிய மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு ஆடு கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டது. இதனால், இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் சென்ற வக்கு வாரிய தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் எம்பியுமான நவாஸ் கனி குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் அங்கு சென்று ஆய்வு செய்தபோது அவருடன் வந்தவர்கள் பிரியாணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
பிரியாணி சாப்பிடும் புகைப்படத்தை நவாஸ் கனியும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவிலில் மலையில் அமர்ந்து நவாஸ் கனி அசைவ உணவு சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையைக் காக்க இன்று போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது. இதில் பல இந்து அமைப்புகளும் கலந்து கொள்வார்கள் எனவும் அறிவித்தது. இதற்காக இந்து முன்னணி போராட்டத்தை முன்னிட்டு சுவரொட்டிக ஒட்டப்பட்டு, பிட் நோட்டீஸ் வழங்கியவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மதுரையில் நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், போராட்டங்கள் நடத்தவும் பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்படுவதாக மதுரை மாநகர் போலீசார் கூறியுள்ளனர். ஆனாலும், தடையை மீறி போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. மேலும் பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளும் இந்து அமைப்பினரும் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்வோம் என அறிவித்திருக்கிறார்கள். அங்கு பதட்டம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் கலவர தடுப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருக்கின்றது. திருப்பரங்குன்றம் மலைக்கு தடையை மீறி வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் பிரபுவை முறப்பநாடு போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.