
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் முகமது அசாருதீன் ( 38 ) வீட்டில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்புள்ள பழைய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக துாத்துக்குடியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான முகமது அசாருதீனை தேடி வருகின்றனர்.
இளையான்குடியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காரில் மர்ம நபர்கள் சுற்றித்திரிவதாக டி.எஸ்.பி., அமல அட்வினுக்கு கிடைத்த தகவலின்படி, எஸ்.ஐ., சிவசுப்பு, சிறப்பு எஸ்.ஐ., அய்யனார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி சூசைநகர் முத்துச்செல்வம் ( 36 ), கே.வி.கே. நகர் முத்துராஜ் ( 27 ), தாளமுத்து நகர் கனகராஜ் ( 26 ) , தாய்நகர் யோவான் ( 30 ), அத்திமரப்பட்டி ராஜேஷ்குமார் ( 30 ) , மற்றொரு கனகராஜ் ( 29 ) ஆகியோர் வந்த காரை நிறுத்தி காரில் வந்த 6 பேரையும் விசாரித்தனர்.
விசாரணையில் எஸ்.டி.பி.ஐ., முன்னாள் மாவட்ட செயலாளர் முகமது அசாருதீன் மற்றும் நவுபில் ஆகியோரை தொழில் நிமித்தமாக பார்க்க வந்ததாக முன்னுக்கு பின் முரணான தகவலை அவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து சாலையூரில் உள்ள முகமது அசாருதீன் வீட்டை சோதனை செய்தனர்.அப்போது பயன்பாட்டில் இல்லாத பழைய ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் ரூ.35 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான முகமது அசாரூதீனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கைதானவர்களிடம் இருந்து ஒரு வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.