
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், எல்லை நாயக்கன்பட்டி ஊராட்சி, தெய்வசெயல்புரம் ஊரில் அரசுடையார் குளம் என்ற சாஸ்தா குளம் உள்ளது.
இந்த குளம் மானாவாரி குளம் ஆகும். இந்தக் குளத்து பாசனத்தின் மூலமாக சுமார் 30 ஏக்கர் நெல் விவசாயம் முன்பு நடைபெற்றது. தற்போது இந்த குளத்தில் மடைகள் மிகவும் பழுதடைந்து, கரைகளில் கருவேலம் செடிகள் முளைத்துள்ளது. பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு படித்துறைகள் இடிந்தும் காணப்படுகிறது. குளத்தின் கரையில் நீர் கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் விவசாய நிலங்களுக்கு குளத்தின் கரைமீது நடந்து செல்ல முடியாத அளவில் கரை மிகவும் சிதிலமடைந்துள்ளது.
இந்த குளம் தூர்வாரி சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். தற்போது இந்த குளத்தில் மடை இருக்கும் பகுதி மிகவும் மேடாக உள்ளது. இதனால், மடை அடைப்பு, திறப்பு என எந்த பயன்பாடும் செய்யமுடியாத அளவிற்கும், மடை உடைந்த நிலையிலும் உள்ளது. மழைக்காலங்களில் வீணாகத் தண்ணீர் வெளியேறுகிறது. இந்தப் பகுதிகளில் பெரும்பாலும் ஆடு, மாடு வளர்ப்பு அதிகமாக உள்ளது. இந்த குளத்தை தூர்வாரினால் ஆடு மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு பயன் உள்ள வகையில், கோடை காலம் வரை தண்ணீர் தேங்கி இருக்கும். இந்த குளத்தை நம்பி இருக்கக்கூடிய விவசாயிகளும் பயன்பெறுவர்.
எனவே இந்த குளத்தை தூர்வாரி, மடையை சரி செய்து, கரையில் இருக்கும் முள் செடிகளை அகற்றி, கரையை பலப்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக படித்துறைகள் கட்டிக் கொடுத்து உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என ஊர் பொதுமக்கள் சார்பாக வழக்கறிஞர் செந்தில் குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று ( 3.2.25 ) கோரிக்கை மனு அளித்தார்.