• vilasalnews@gmail.com

இந்தியாவிற்கே பெருமை... வேகமாகும் பணிகளால் மகிழ்ச்சியில் தூத்துக்குடி மக்கள்!!

  • Share on

நம் நாட்டினர் வெளிநாடு சென்று  விமான பயிற்சி பெறுவதை தடுத்து, தமிழகத்திற்கு வரவழைக்க, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்கும் பணியை, டிட்கோ வேகப்படுத்தி உள்ளது.


மத்திய அரசு நாடு முழுதும் முக்கிய நகரங்களில், புதிய விமான நிலையங்களை அமைத்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில், விமான சேவை என்பது பலமடங்கு அதிகரிக்க உள்ளதால், விமானத்தை இயக்கும் விமானிகளின் தேவையும் அதிகரிக்கும்.


ஆகவே, இந்தியாவில் சர்வதேச தரத்தில் விமானத்தை இயக்க பயிற்சி அளிக்கும், விமான பயிற்சி நிறுவனங்கள் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து பலரும் விமான பயிற்சி பெறுவதற்காக பிரிட்டன், பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இதற்காக அதிகம் செலவிடுகின்றனர்.


இதை தவிர்க்கவும், விமான பயிற்சி நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கவும், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்க, டிட்கோ எனப்படும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.


கோவில்பட்டி அடுத்த நாலாட்டின் புதுார், தோணுகல் கிராமங்களில், அரசின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தனியார் நிறுவனம் விமான ஓடுதளம் அமைத்து உள்ளது. இங்கே பல ஆண்டுகளாக விமானம் இயக்கப்படவில்லை. அந்த இடத்தில், விமான பயிற்சி நிறுவனம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்குள்ள ஓடுதளத்தை பயன்படுத்தி 10 பயிற்சி விமானங்கள் இயக்கலாம்.


இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை டிட்கோ செய்து தர உள்ளது. இங்குள்ள ஓடுதளத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்கள் விமானம் இயக்க பயிற்சி தரலாம். கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்க ஆர்வமாக உள்ள நிறுவனங்களிடம் டிட்கோ விருப்பம் கேட்டது.


பல நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது. தற்போது, விமான ஓடுதளம் போன்றவற்றுக்கு அடிப்படைஉள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.


இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்கும் பணிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியிலும் டிட்கோ ஈடுபட்டுள்ளது.


இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''விமான பயிற்சி நிலையத்தை, ஜூனுக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் வாயிலாக சர்வதேச தரத்தில் விமான பயிற்சி தமிழகத்திலேயே வழங்கப்படும்" என்றார்.


தோணுகால் கிராமத்தில் மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கிமீ நீளம் மற்றும் 15 மீட்டர் அகலத்தில் விமான ஓடுதளம் அமைந்துள்ளது. இது கோவையை சேர்ந்த லட்சுமி ஆலை நிர்வாகம் சார்பில் தங்களது தனி விமானத்தை இறக்குவதற்காக உருவாக்கப்பட்டது. அவர்கள் செஸ்னா வகை சிறிய ரக விமானத்தில் வந்து சென்றுள்ளனர். காலப்போக்கில் வேறு சிலரும் இந்த ஓடுதளத்தை பயன்படுத்தி உள்ளனர். நாலாட்டின்புதூர் மற்றும் தோணுகால் ஆகிய இரு கிராமங்களில் 63 ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ள இந்த ஓடுதளம் 1998 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.


மேலும், இங்கு சர்வதேச விமான பயிற்சி நிலையம் அமைய உள்ளது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1500 விமான ஓட்டிகள் தேவைப்படுகின்றனர். ஆனால் 600 பேர் தான் இந்தியாவில் இருந்து வருகின்றனர். மற்ற அனைவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான். எனவே இப்பகுதியில் விமான பயிற்சி மையம் அமையப்பெற்றால் தமிழகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து விமான பயிற்சி பெற மாணவர்கள் வருவார்கள். அவர்களுக்கு குறைந்தது 18 மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும். இதனால் இப்பகுதியில் பொருளாதாரம் மேம்படும். இந்த விமான பயிற்சி மையத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழக மாணவர்களின் விமான பைலட் கனவு நினைவாகும். மேலும், விமான பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும் என்கின்றனர் விவரமான உள்ளூர் வளர்ச்சி ஆர்வலர்கள்.

  • Share on

திருச்செந்தூர் கோயிலில் தைப்பூச திருவிழாவிற்கு வருவோர் கவனத்திற்கு!

தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநில தலைவரை கௌரவித்த தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்பு நிர்வாகி!

  • Share on