
தூத்துக்குடி மாவட்டம் முறம்பனில் நடந்த கொலை வழக்கில் ஒருவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆயுள் தண்டனை விதித்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே முறம்பனை சேர்ந்தவர் செந்தூர். இவர் தன் மனைவியுடன் அதே பகுதி கோபால் சாமி ( 60 ) என்பவருக்கு தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டார். செந்தூர் தாக்கியதில் கோபால்சாமி காயமடைந்தார். ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அவர் இறந்தார்.
செந்தூர் மீது மணியாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு காயம் விளைவித்தல் பிரிவில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது தூத்துக்குடி விரைவு நீதிமன்றம். இதை எதிர்த்து செந்தூரும், கொலை குற்றத்திற்குரிய பிரிவில் தண்டனை விதிக்க கேட்டு மணியாச்சி காவல் ஆய்வாளரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் ஆர்.பூர்ணிமா அமர்வு இதனை விசாரித்து வந்தது.
எதனால் மரணம் ஏற்பட்டது என்பதனை கிழமை நீதிமன்றம் தெளிவு படுத்தவில்லை. செந்தூரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கிழமை நீதிமன்ற உத்தரவு மாற்றி அமைக்கப்பட்டு செந்தூருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.