
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக திரைப்பட துணை நடிகரும் இன்ஸ்டா பிரபலமுமான செல்வா மீது கோயில் நிர்வாகம் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் துணை நடிகராக நடித்தவர் செல்வா. இவர் இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் இருந்து வருகிறார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சில தினங்களுக்கு முன்பு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவர் திருச்செந்தூருக்கு சென்று வந்த பயணத்தை வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்
அந்த வீடியோவில் அவர் திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு வருவதும், அங்கு புகைப்படம் எடுப்பதுமாக இருந்தார். பின் கடற்கரையில் குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் பட்டையிட்டுக் கொண்டு அவர் பச்சை வேட்டியில் கோயிலுக்கு சென்றார்.
அங்கு மேல் சட்டையில்லாமல் சென்ற அவர், கோயிலுக்குள் ஒரு பையுடன் சென்றார். பிறகுதான் அந்த வீடியோவில் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அந்த வீடியோவில் மூலவரின் காட்சிகளும் வெளியாகியிருந்தது. மேலும் அவர் பக்தர்களுடன் செல்ஃபி எடுத்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இதை பார்த்த பக்தர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியானர். அதாவது, கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாத நிலையில் இவர் எப்படி எடுத்துச் சென்றார் ? எல்லாவற்றுக்கும் மேல் மூலவரை எந்த கோயிலிலும் புகைப்படமோ வீடியோவோ எடுக்கக் கூடாத நிலையில் இவர் மட்டும் எப்படி எடுத்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த வீடியோ வைரலான நிலையில் செல்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். கோயிலின் புனிதத் தன்மையை காக்க பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.
திருச்செந்தூர் முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழனி முருகன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் செல்போனை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் ஒப்படைத்துவிட்டு பிறகு சுவாமி தரிசனம் செய்துவிட்டுதான் அதை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது.