
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள கிளம்பிய டாஸ்மாக் சங்க நிர்வாகிகளை போலீசார் வீட்டு காவலில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் மேற்பார்வையல் சங்கம் உள்ளிட்ட 10 டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், பணி நிரந்தரம், அரசு பணியாளருக்கு இணையாக சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ( ஜன., 26 ) சென்னையில் காத்திருப்பு தொடர் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்காக தூத்துக்குடியில் இருந்து கிளம்பிய டாஸ்மாக் சங்க நிர்வாகிகளை போலீசார் வீட்டு காவலில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மாநில செயலாளர் கே.வெங்கடேசன் கூறியதாவது:-
120 டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 2 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்கும் நோக்கத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் போராட்டத்துக்கு கிளம்பியவர்களில் தூத்துக்குடியில் கே.வெங்கடேசன், மெஞ்ஞானபுரத்தில் எஸ்.முருகன். கயத்தாரில் கல்யாணகுமார் ஆகியோரை போராட்டத்துக்கு செல்லவிடாமல் போலிசார் வீட்டு காவலில் வைத்தனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.