
தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களாக பள்ளிகள், விமான நிலையங்கள், விமானங்கள் உள்பட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இன்று தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் இயங்கி வரும் அழகர் பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் இமெயில் வந்துள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து எஸ்.ஐ., ரத்தினவேல் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் பள்ளி 3 மணிக்கு விடப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்குள் சென்று ஒவ்வொரு அறையாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் இவை வெறும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.