
எட்டயபுரம் நகைக்கடையில் திருட்டு வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் 2018ம் ஆண்டு பஜாரில் அரசு மருத்துவமனை அருகேயுள்ள நகைக் கடையின் பின்பக்கச் சுவரில் மர்ம நபர்கள் துளையிட்டு உள்ளே புகுந்து லாக்கரை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றனர். அதில் 7 பேர் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரைக் கைது செய்தனர்.
4 பேரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் தான், எட்டயபுரம் காவல் ஆய்வாளர் நவநீதகண்ணன், உதவி ஆய்வாளர் மாதவராஜா, போலீசார் நேற்று முன்தினம் இரவு அரண்மனை மேலவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
தொடர்ந்து, அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று, விரல்ரேகை பதிவு செய்தனர். அப்போது அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் திம்மலை சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (45) என்பதும், எட்டயபுரம் நகைக்கடை திருட்டில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்குத் தொடர்பாக மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.