
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூரணி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், இலுப்பையூரணி ஊராட்சியினை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 31-12-2024 அன்று அரசாணை (நிலை) எண் 202-ல் 41 நகராட்சி எல்லைகளை விரிவாக்கம் செய்தல் உத்தேச முடிவு ஆணைகள் வெளியிடப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பையூரணி ஊராட்சியும் உள்ளடங்கியுள்ளது. இந்த முடிவை முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரான முடிவாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த முடிவினை இப்பகுதியில் எந்தவித கருத்து கேட்பு கூட்டமும் நடத்தாமல் அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இதற்கு முதலில் எங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தணை ஆண்டு காலம் கிராமப்புறங்களில் இருந்த இந்த இலுப்பையூரணி ஊராட்சி மன்றம் இதுவரை அடிப்படை வசதிகளை கூட முழுமையாக இன்னும் செய்துதரவில்லை. குடிநீர் வசதிகள் கூட இல்லை. மக்கள் குடிநீருக்காக தினமும் ரூபாய் 20 செலவு செய்யக்கூடிய அவலநிலைதான் இன்னமும் உள்ளது. மேல்நிலைநீர்தேக்க தொட்டிகள் கட்டி காட்சி பொருளாகவே இன்னும் உள்ளது.
இந்த ஊராட்சிக்குட்பட்ட ஏணைய தெருக்களில் வாறுகால் வசதிகள் இல்லை. குப்பைகள் போட வசதி இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் திற்ந்தவெளியில் தான் குப்பைகள் கொட்டப்படுகிறது. சாலை வசதிகளும் முழுமையாக செய்யவில்லை.
இப்படிபட்ட சூழலில் இப்பகுதியினை நகராட்சியுடன் இணைப்பது சாத்தியமற்றது. அதுபோக இப்பகுதியின் பெரும்பான்மையான மக்கள் மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் தான் வாழ்ந்து வசித்து வருகின்றனர். இம்மக்கள் விவசாய தொழிலையும், தீப்பற்றி தொழிலையும் மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். கிராம பகுதியில் வாழும் மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இத்திட்டங்களை பயன்படுத்திதான் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் இத்திட்டங்கள் இம்மக்களுக்கு முழுமையாக கூட சென்றடையவில்லை. இந்நிலையில் இப்பகுதி நகராட்சியுடன் இணைக்கப்பட்டு நகராட்சியாக உருமாறிய பின்பு மத்திய, மாநில அரசுகளின் எந்தவித திட்டங்களும் இந்த மக்களுக்கு கிடைக்காமல் போய்விடும். இத்திட்டங்களின் மூலமாகத்தான் இந்த கிராம மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தன் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டு வருகின்றனர். இந்த மக்களின் சொற்ப வளர்ச்சியையும் தடுத்திட வழிவகுத்துவிடும் இந்த நகராட்சி விரிவாக்க முடிவு.
மேற்கண்ட நகராட்சி விரிவாக்க முடிவுக்கு எதிர்ப்பு மேற்க்கூறிய காரணங்கள் பெரும்பான்மையாகும். இவைமட்டுமல்ல இந்த இலுப்பையூரணி ஊராட்சியில் பெரும்பான்மையாக பட்டியல் பிரிவில் உள்ள தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிட மக்கள் தான் உள்ளனர். இவ்வூராட்சியின் தலைவரும், நிர்வாகத்திலும் இந்த பட்டியல் பிரிவிலுள்ளவர்கள் உள்ளதாலும், இவ்வூராட்சியின் தலைவர் பொறுப்பு பட்டியல் பிரிவிலிருந்து பொது பிரிவுக்கு மாற்றப்பட்ட போதிலும் பட்டியல் பிரிவிலுள்ளவரே தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாலும் இதனை தடுப்பதற்க்காகவே இந்த நகராட்சி விரிவாக்க முடிவு. நகராட்சிக்கு கொஞ்சங்கூட தகுதியற்ற இலுப்பையூரணி ஊராட்சியினை அரசில் கீழ்மட்டத்திலுள்ள சில அதிகாரிகள் ஆதிக்க சாதிய மனபோவத்துடன் அரசிற்க்கு தவறான தகவல் அளிக்கப்பட்டதின் விளைவு தான் இந்த நகராட்சி விரிவாக்க முடிவு.
எனவே தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 31-12-2024 அன்று அரசாணை (நிலை) எண் 202-ல் 41 நகராட்சி எல்லைகளை விரிவாக்கம் செய்தல் - உத்தேச முடிவு ஆணைகள் வெளியிடப்பட்டதை இரத்து செய்யவும் அல்லது திருத்தம் செய்து இவ்வாணையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பையூரணி ஊராட்சியினை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதை, விரிவாக்கம் செய்வதை விடுவிக்குமாறும் இக்கிராம சபை கூட்டம் தீர்மானம் இயற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறோம் என புதிய தமிழகம் கட்சி நிர்வாகி இராஜசேகரன் இலுப்பையூரணி கிராம சபை கூட்டத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.