தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கீதாஜீவன் எம்எல்ஏ சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு அளித்தார்.
தமிழ்நாடு சட்டசபையின் பதவி காலம் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், திமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் 17-02-2021 முதல் 24-02-2021 வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் எம்எல்ஏ, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுச் செயலாளர் துறைமுருகனிடம் விருப்ப மனு அளித்தார். இதுபோல் தூத்துக்குடியில் போட்டியிட மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமியும் விருப்ப மனு அளித்தார்.
மேலும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஜீ.வி. மார்க்கண்டேயன் விருப்ப மனு அளித்தார். இதில், திமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர் கீதா முருகேசன், அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி பாலன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தொண்டர் அணி ரமேஷ், பொறியாளர் அணி அன்பழகன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் ஜெயக்குமார், சுரேஷ், மேகநாதன், பாலகுருசாமி, உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.