தூத்துக்குடி மாவட்டத்தில், நான்கு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும், அதனை தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமியின் பிராச்சார பயணம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் காலம் நெருங்க, நெருங்க ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என திமுகவும் தீவிரமாக தமிழகத்தில் பல்வேறு உத்திகளை கையாண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட கட்சியினரிடையேயும் போட்டோ போட்டி நடந்துவருகிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட விருப்புமுள்ள தங்களது கட்சியினரிடம் விருப்ப மனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு, விருப்ப மனு வாங்கி தாக்கல் செய்யும் பணியும் விறுவிறுப்பாக தொடங்க ஆரம்பித்து நடந்து வருகிறது.
இந்த சூழலில், தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும், அதனை தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமியின் பிராச்சார பயணம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், கோவில் பட்டி, விளாத்திகுளம் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம், கோவில் பட்டி, விளாத்திகுளம் ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்களும், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், ஆகிய
மூன்று தொகுதிகளில் திமுகவைச் சேர்ந்தவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக சம எண்ணிக்கை உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 3 ம் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்டமான கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளிலும், நேற்று ( பிப்ரவரி 17) தெற்கு மாவட்டமான தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் வடக்கு மாவட்டமான ஒட்டப்பிடாரத்திலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார சுற்றுபயணம் மேற்கொண்டார்.
இதில், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய நான்கு தொகுதிகளில் மட்டுமே, திறந்தவெளியில் வேனில் நின்றும், பொது கூட்ட மேடை வாயிலாகவும் மக்களிடையே நேரடியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மீதமுள்ள ஒட்டப்பிடாரம் தொகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடலும், திருச்செந்தூர் தொகுதியில் மகளிருடன் கலந்துரையாடல் மட்டுமே மேற்கொண்டார்.
இதன் மூலம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய நான்கு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் உறுதி செய்யப்பட்டுவிட்டதாலே, முதல்வர் பழனிச்சாமி முதல்கட்டமாக மக்களிடையே நேரடியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு முடித்துக்கொண்டு சென்று இருக்கிறார் எனவும், மீதமுள்ள ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதால், தொகுதி பங்கீடு முடிந்தவுடன் தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படும் சுற்று பயணத்தின் போது பிரச்சாரத்தை பார்த்து கொள்ளலாம் எனவும் முதல்வர் தரப்பில் எண்ணியதாகவும் கூறப்படுகிறது.
ஆக, கோவில்பட்டியில் கடம்பூர் ராஜுவும், ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்பி.சண்முகநாதனும், விளாத்திகுளத்தில் சின்னப்பனுக்கும் என மூன்று சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் அதிமுகவில் போட்டியிடவும், தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.த.செல்லப்பாண்டிக்கும் சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணியில், ஒட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சிக்கும், திருச்செந்தூர் தொகுதி பாஜக விற்கும் ஒதுக்கப்பட உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு இந்த தொகுதிகள் ஒருவேளை இல்லாது போகுமானால், அதிமுக சார்பில் ஒட்டப்பிடாரத்தில் முன்னாள் எம்எல்ஏவும், மேற்கு ஒன்றிய செயலாளருமான மோகனுக்கும், திருச்செந்தூரில் அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் உறுதியாகிவிட்டதால், அங்கு தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கிவிட்டது.