
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில், வீர தீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொது மக்களுக்கு வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற 75ஆவது குடியரசு தின விழாவில் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களைத் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த யாசர் அராபத், திருநெல்வேலி மாவட்டம் டேனியல் செல்வசிங், ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிலையில் தான் இந்தியாவில் 76வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 26.01.2025 அன்று மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகில் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்விழாவில் வீர, தீர செயலுக்கான வழங்கப்படும் அண்ணா பதக்கத்திற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் லிமின்டன் என்ற இளைஞர் விண்ணப்பித்து காத்திருக்கிறார். அவருக்கு கிடைக்குமா? என்ற ஆவலோடு தூத்துக்குடி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம், திருக்களூரைச் சேர்ந்த சிலுவை அந்தோணி சேவியர் என்பவரது மகன் லிமின்டன். இவர் கடந்த டிசம்பர் 17.12. 2023 இரவு மற்றும் 18.12.2023 அதிகாலை அன்று, தமிழகமே எதிர்பாராத பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கடுமையான, வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் வெள்ளங்களால் பாதிப்படைந்தன. குறிப்பாக ஏரல் வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெரும் வெள்ளங்களால் மூழ்கியது.
வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அண்ணாநகரில் -12 நபர்களும், வ.ஊ.சி நகரில் 16 நபர்களும், மணல்குண்டு அருகில் செங்கள் சூலையில் 17 நபர்களும் என மொத்தம் 45 நபர்களை தனது சொந்த முயற்சியில் 12 முதல் 15 அடி ஆழத்தில் நீந்தி சென்று ஜாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைத்து மக்களின் உயிர்களை பத்திரமாக காப்பாற்றியுள்ளார். இதில் 6 மாத கற்பிணி பெண் மற்றும் 28 பெண்கள், முதிய ஆண் 5 நபர்கள் உட்பட 45 நபர்கள் ஆவார்கள்.
தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் லிமின்டனின் வெள்ள மீட்பு பணி வீர செயலை பாராட்டியதோடு, தமிழக அரசு வழங்கும் வீர தீர செயல் அண்ணா விருது எனக்கு வழங்க கோரி பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளார். மேலும், ஸ்ரீவைகுண்ம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் ஆழ்வார்திருநகரி முதல் நிலை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, கேம்பராபாத் ஊராட்சி தலைவர் சபிதா சர்மிளா, திருக்களுர் பஞ்சாயத்து தலைவர் பிரபஞ்சன் உள்ளிட்டோரும் லிமின்டன் செயலை பாராட்டி தமிழக அரசு வழங்க இருக்கும் வீர தீர செயல் அண்ணா விருது லிமிண்டனுக்கு வழங்க கோரி பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளார்கள்.
மேலும் லிமின்டன் காப்பாற்றிய 45 நபர்களின் 6 மாத கற்பிணி பெண் உட்பட 6 நபர்கள் அண்ணா விருது பரிந்துரை வாக்குமூல கடிதம் வழங்கியுள்ளனர். தொடர்ந்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க லிமின்டனும் கடந்த 8.12.24 அன்று தமிழ்நாடு அரசு சார்பில், வீர தீர செயல்கள் புரிந்த பொது மக்களுக்கு வழங்கப்படும் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளார்.
இந்தநிலையில், 26.1.25 அன்று சென்னையில் நடைபெறும் 76ஆவது குடியரசு தின விழாவில் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம், திருக்களூரைச் சேர்ந்த சிலுவை அந்தோணி சேவியர் என்பவரது மகன் லிமின்டன் என்பவருக்கு வழங்க தமிழக அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.