
ராசிபுரம் அடுத்த போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் வல்லரசு தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் படித்து வறுமையிலும் திறமையால் வென்று இந்திய அளவில் முதல் இடம் பிடித்து கின்ஸ் அகாடமிக்கும், தூத்துக்குடிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ராசிபுரம் அடுத்த போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் வல்லரசு ( 24 ) இவரது தந்தை இறந்துவிட்டார். தாய் மேகலா தான் கூலி வேலைக்கு சென்று, வல்லரசை படிக்க வைத்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சிங்களாந்தபுரம் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்து, தனது சாதனையின் முதல் படியை எடுத்து வைத்தார். தொடர்ந்து பி.எஸ்சி., அக்ரி முடித்த வல்லரசு, போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற தொடங்கினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மண்டல கிராம வங்கிக்கான ஆர்.ஆர்.பி., தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில், வல்லரசு, 100க்கு, 72.8 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். சாதனை படைத்த வல்லரசுவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பாராட்டுகள் தொடங்கி, தனது சொந்த ஊரான போடிநாயக்கன்பட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம் தொட்டு, தூத்துக்குடியில் பயின்ற கின்ஸ் அகாடாமி சார்பில் பாராட்டு விழா எடுத்தது தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
மாணவன் வல்லரசுவின் திறமையைக்கு மணிமகுடம் சூட்டும் விதமாக கின்ஸ் அகாடமியில் அவரது பெயரில் ஒரு ஹாலை உருவாக்கி இருக்கிறார் கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சுமுத்து.
தூத்துக்குடி கின்ஸ் அகாடமியின் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பயின்று வங்கி தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று வரலாறு சாதனை புரிந்த மாணவர் வல்லரசு மற்றும் வெற்றி பெற்ற 14 மாணவர்களுக்கான பாராடடு விழா கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து தலைமையில் நேற்று ( ஜன.,23 ) நடைபெற்றது. ஆங்கில பயிற்றுனர் அபித் வரவேற்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற கின்ஸ் அகாடமி மாணவர் வல்லரசுக்கு பொன்னாடை அனிவித்து நினைவு பரிசு வழங்கி, அவரது பெயரை படிக்கும் வளாகத்திற்கு சூட்டிய பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.
வறுமையிலும் தனது திறமையால் இந்தியாவையே மிரளச்செய்த போடிநாயக்கன்பட்டி மாணவனின் வெற்றி, அவர் பிறந்த நாமக்கல் மாவட்டத்திற்கும், போட்டி தேர்விற்கு பயிற்சி கொடுத்த தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.