
குளத்தூர் பஜாரில் கிடந்த தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு டிஎஸ்பி மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், குளத்தூர் அருகே மேட்டுப்பனையூரை சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி. இவர் கடந்த 18ஆம் தேதி குளத்தூரில் உள்ள தனியார் பைனான்ஸில் அடகு வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையில், வழியில் நகைகளை தவற விட்டுள்ளார்.
இதுகுறித்து மாரியப்பன் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் குளத்தூர் பஜார் பகுதியில் மொபைல் கடையில் வேலை செய்து வரும் மேல்மாந்தை கிராமத்தைச் சேர்ந்த குமரய்யா மகன் ராஜ்குமார், பஜாரில் டீ குடிக்க சென்ற போது கீழே பாக்ஸ் கிடைப்பதை பார்த்து எடுத்துள்ளார். அதில் ஒரு ஜோடி கம்மல் தங்க மோதிரம் இருப்பதை கண்டதும் உடனடியாக அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த நகைகள் மாரியப்பன் தம்பதியினர் உடையது என தெரிய வந்தது. தகவல் அறிந்த விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் தம்பதியினரை வரவழைத்து நகைகளை ஒப்படைத்தார். மேலும் ராஜ்குமாரின் நேர்மையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். எஸ்ஐ முத்துராஜா மற்றும் போலீசார், குளத்தூர் பகுதி பொதுமக்களும் ராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.