• vilasalnews@gmail.com

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம் : அமலாக்கத்துறை அதிரடி

  • Share on

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையின் சென்னை அலுவலக மண்டலம் முடக்கியுள்ளது.


தூத்துக்குடி, மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதியில் உள்ள அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது


கடந்த 2001 - 2006 அதிமுகவில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக அனிதா ராதா கிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்துள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏழு நபர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றப்பட்டது.


பின்னர் இந்த வழக்கு கடந்த 2020ஆம் ஆண்டு அமலாக்கத்துறைக்கு மாறியது. இந்த நிலையில், இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என கடந்த 2022ம் ஆண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் எனவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பிற நபர்கள் குறித்த சொத்து விவரங்கள் கேட்டு 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கடிதம் எழுதி சொத்து விவரங்களை பெற்றனர். தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்கள், மதுரையில் தல்லாகுளம் உள்ளிட்ட 2 சார் பதிவாளர் அலுவலகங்கள், சென்னையில் ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட மூன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் என 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களை பெற்றனர். 


இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அளித்தனர். கடந்த ஒரிரு மாதத்திற்கு முன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணையானது நடைபெற்றது. மேலும், 30 க்கும் மேற்பட்ட எழுத்து வடிவில் கேள்விகள் கேட்கப்பட்டு, எழுத்து வடிவில் பதில்கள் பெறப்பட்டது.


இத்தகைய சூழ்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையின் சென்னை அலுவலக மண்டலம் முடக்கியுள்ளது.


தூத்துக்குடி, மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதியில் உள்ள அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

  • Share on

பறவைகளின் மொழி அறிவோம்... இசையையும், இயற்கையையும் ரசித்திட!

வாலிபால் இறுதிப்போட்டி : முதல் பரிசை தட்டிய தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் அணியினர்!

  • Share on