
சென்னையில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முடிதிருத்தும் அழகு கலை தொழிலாளர் நலச் சங்கம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்க செயலாளர் விஜயகுமார், தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் பாண்டியன், அமைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மருத்துவர், நாவிதர் சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 1970 ஆம் ஆண்டு வெளியான சட்டநாதன் குழு அறிக்கையின்படி, உட்பிரிவு சாதிப் பெயர்களை நீக்கி மருத்துவர் என்ற ஒரே பெயராக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை, இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நாளை 24ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர் நலச் சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் முழு ஆதரவு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 24ஆம் தேதி சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும். மேலும் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்வது என்று முடிவு செய்துள்ளோம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்ட சவரத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் முத்தரசு, மாவட்ட பொருளாளர் நாராயணன், மாநகரத் தலைவர் சுப்பிரமணியன், மாநகரப் பொருளாளர் பால சரவணவேல் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
6 அம்ச கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை ( 24 ம் தேதி ) சலூன் கடைகளை அடைத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு மாநில சங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சலூன் கடைகளை நாளை அடைத்து ஆதரவு தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்