
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமார் 12 பவுன் நகையை திருடிய 2 பேரை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவர் வெளிநாட்டிலிருந்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஊருக்கு வந்துள்ளார். இவரை வரவேற்பதற்காக குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு திருவனந்தபுரம் சென்றனர். அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 12 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. பின்னர் புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் நெல்லை மாவட்டம் அயன்சிங்கம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் ( 29 ), கான்சாபுரத்தைச் சேர்ந்த முருகப்பெருமாள் ( 23 ) ஆகியோர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சுமார் 9 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.