பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள் சென்னை திரும்பும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் தங்கி இருந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு அதிகம் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ஆகவே, பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
இதில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகளவிலான மக்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணித்தனர். சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் சிறப்பு ரயில்கள், மெமு ரயிலும் இயக்கப்பட்டது.
இதனையடுத்து, பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து ஏரளமான மக்கள் சென்னையை நோக்கி படையெடுப்பார்கள். ஆகவே, அதற்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் வகையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு தெற்கு ரயில்வே சார்பில் ஜனவரி 19ஆம் தேதி அன்று ஒரு வழி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஜனவரி 15 அன்று (நாளை) காலை 8 மணிக்கு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி - தாம்பரம் ஒரு வழி அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06168) தூத்துக்குடியில் இருந்து ஜனவரி 19 அன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் (திங்கட்கிழமை) காலை 3.45 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரயில், தூத்துக்குடி, தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.7 ஏசி மூன்று அடுக்குப் பெட்டிகள், 6 ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இருக்கும்.