காணும் பொங்கலையொட்டி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி ஆல்பட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில்:-
காணும் பொங்கலை பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடும் விதமாக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கானும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா படகு சேவையில் நிர்ணயிக்கப்பட்ட பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்ல வேண்டும். கூடுதலாக ஆட்களை ஏற்றக்கூடாது. மாவட்டம் முழுவதும் 24 மணிநேரமும் வாகன தணிக்கை மேற்கொள்ளும் விதமாக 75 வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொதுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் கூட ஊர் மக்களே சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.
பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உறுதியாக உள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். வன்முறை, சாதி பிரிவினையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பைக் ரேஸில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்க்ள மீது போக்குவரத்து விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையை காரணமாக ஏராளமான பொதுமக்கள் வெளியூர் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் மக்கள் தங்கள் வீடு பூட்டப்பட்டு இருப்பது குறித்து அருகே உள்ள காவல்துறையினருக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் ரவுடிகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.