தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் பைக் சாகசத்தில் ஈடுபட்டோரிடமிருந்து 14 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், ஏஎஸ்பி மதன் மேற்பார்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் தலைமையிலான போலீசார், மாநகரப் பகுதிகளில் நேற்று (ஜன.,11 ) சனிக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாளையங்கோட்டை சாலையோரம் உள்ள அணுகு சாலை, கடற்கரை சாலை ஆகிய இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் சிலர் பைக் சாகத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு மொத்தம் ரூ. 1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மொத்தமாக நேற்று ஒரே நாளில் மட்டும் நகரப் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவற்றின் மூலம் ரூபாய் 3,32,500 அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.