• vilasalnews@gmail.com

அன்றும் இதே... இன்றும் இதே திமுக தான் : தூத்துக்குடி பாஜக பரபரப்பு அறிக்கை!

  • Share on

தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தலைவர் சித்ராங்கதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-


மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம், காரியாப்பட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, நாகலாபும், விளாத்திக்குளம், குளத்தூர் மார்க்கமாக தூத்துக்குடி வரைக்கும், சுமார் 143.5 கி.மீ தூரத்திற்கு புதிய இரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 


கடந்த ஜூலை மாதம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இந்த இரயில் பாதை திட்டத்திற்காக பாரதப்பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்கள். 


இந்நிலையில், நேற்று தமிழகம் வருகை தந்த மத்திய இரயில்வேதுறை அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் அளித்த பேட்டியில், திமுக அரசு மதுரை தூத்துக்குடி புதிய இரயில் பாதை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுத்துப்பூர்வமாக கடிதம் அனுப்பியதால், கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள். 

 

இது தொடர்பாக, மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, பாரததேசத்தை வளர்ச்சிப்பாதையில் முன்னோக்கி பாரதப்பிரதமர் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றது. இந்த திறனற்ற திமுக அரசை கண்டித்து, வருகின்ற ஜனவரி 20ம் தேதி அருப்புகோட்டை நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கண்டனத்தை பதிவு செய்துள்ளார்கள். 


மேலும் தென்தமிழகத்தின் வளர்ச்சிதான் தமிழகத்தின் வளர்ச்சி என்று தலைவர் அண்ணாமலை அவர்கள் ஒவ்வொரு முறையும் தென்தமிழகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வருவது மட்டுமல்லாமல், பாரதப்பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின், நேரடி பார்வைக்கு கொண்டு சென்று, அதன்வாயிலாக குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், வ.உ.சி துறைமுகத்தில் புதிதாக வெளிதுறைமுக சரக்கு பெட்டகம் அமைத்தல், அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் இரயில்வே நிலையங்களை நவீன மயமாக்குதல், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்தில் விரிவாக்கம்(381 கோடி மதிப்பீட்டில்), தூத்துக்குடியில் இருந்து மதுரை வரை இரட்டை வழிதட இரயில்பாதை போன்ற பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தென்தமிழகத்தை மையமாக கொண்டு பாரதப்பிரதமாரால் வழங்கப்பட்டுள்ளது.


மதுரையில் இருந்து தூத்துக்குடி வரையிலான இந்த புதிய இரயில் பாதையினை மையமாக கொண்டு, நாகலாபுரம், விளாத்திக்குளம், குளத்தூர், காரியாப்பட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி போன்ற பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சார்ந்த பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதியின் மூலமாக உயர்கல்வி, மருத்துவம் எளிதாக பெறவும் அதேபோல் பொருளாதார ரீதியிலான வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்திட்டத்தை தடுத்து நிறுத்தி, அவர்களின் வளர்ச்சியை சீர்குழைக்கும் விதமாக, செயல்பட்ட திமுக அரசை வன்மையாக கண்டிப்பது மட்டுமல்லாமல், 


இதுபோன்ற செயல்களில் திமுக அரசு இப்போது மட்டுமல்ல இதேபோன்று கடந்த 2008-09ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரயில்வே பட்ஜெட்டில் கன்னியாகுமரியில் இருந்து கூடன்குளம், திசையன்விளை, உடன்குடி, குலசேகரன்பட்டிணம், திருச்செந்தூர், தூத்துக்குடி, சாயல்குடி, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரையிலான கிழக்கு கடற்கரை இரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து நிறுத்தியதும் இதே திமுக தான். 


இவ்வாறு தொடர்ச்சியாக வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தடுத்து, தென்தமிழக மக்களை ஏழ்மையில் வைத்திருக்க துடிக்கும், திராவிட மாடல் அரசின் எண்ணம் பாரதிய ஜனதா கட்சி இருக்கும் வரையில் நிறைவேறாது என்றும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று கனவுகாணும் உங்களை, தென் தமிழக மக்கள் குறிப்பாக, தூத்துக்குடி மக்கள் படுதோல்வியை பரிசாக அளித்து வீட்டிற்கு அனுப்புவார்கள் என்பதை கூறிக்கொள்கிறேன். என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவு : தூத்துக்குடி திமுக நிர்வாகி மீது விதவைப் பெண் பரபரப்பு புகார்!

கோடிகளை சுருட்டி தலைமறைவான தூத்துக்குடி அருள் வாக்கு சாமியார் கைது!

  • Share on