தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் நகர திமுக செயலாளர் ஆக இருப்பவர் கண்ணன் ( 33 ). இவர் அப்பகுதியில் என்.வி.கே டிரேடர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.
அங்கு நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி ( 34 ) என்பவர் வேலை பார்த்து வருகிறார். மகாலட்சுமியின் கணவர் இறந்துவிட்டதால் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாலட்சுமியுடன் நெருங்கி பழகிய கண்ணன் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினாராம். இதனால் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உறவு வைத்துக் கொண்ட கண்ணன், வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மகாலட்சுமி புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், " கண்ணனுக்கு சொந்தமான கடையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வருகிறேன். விதவைப் பெண் என்ற போதிலும் என்னை காதலிப்பதாக கூறி கண்ணன் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். இதனால் அவருடன் நெருங்கி பழகினேன். இதை போல் பல பெண்களுடன் அவர் நெருங்கி பழகுவது சில நாட்களுக்கு முன்பு தெரிய வந்தது.
இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அங்கு வந்த கண்ணன், ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ரவி, ஏரல் நகர செயலாளர் ராயப்பன், சாயர்புரம் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் மற்றும் எபினேசர் பாக்கியநாதன் ஆகியோர் என்னை மிரட்டினர்.
மூன்று லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு புகாரை திரும்ப பெற வேண்டும் எனக் கூறிய அவர்கள், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணன் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்". இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.
விதவைப் பெண்ணை ஏமாற்றியதாக திமுக நகரச் செயலாளர் மீதும் அவருக்கு துணையாக இருந்து மிரட்டல் விடுத்த திமுக மற்றும் காங்கிரஸ் மீதும் புகார் எழுந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவரது உத்தரவின்பேரில், ஏமாற்றுதல், திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு கொள்ளுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.