தென்மாவட்டங்களை பொறுத்தவரையில் பொங்கல் விழாவுக்கு மறுநாளே காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி மக்கள் வீடுகளில் இறைச்சி சமைத்தும், கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து உணவு சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாடும் வகையில் கடற்கரை, ஆற்றுப்படுகை, சுற்றுலாதளங்கள், பூங்காக்கள், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் என 40க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது. அங்கே பொதுமக்கள் குடும்பமாக சென்று தங்களுடைய காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்கின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாநகரில் காணும் பொங்கல் விழாவையொட்டி தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள முயல் தீவுக்கு செல்லும் மக்களின் கூட்டம் முயல் தீவில் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து இருப்பர். மேலும் இளைஞர்கள், சிறுவர்கள் விளையாடி மகிழ்வர்.
ரோச்பூங்கா மற்றும் முத்துநகர் கடற்கரைக்கு காலை முதல் மக்கள் வரத் தொடங்குவர். நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கும். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக தெரியும். பூங்காவின் ஓரத்தில் கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அங்கு மக்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் திரளாக வந்து ஊஞ்சல், சறுக்கு போன்றவைகளில் ஏறி விளையாடி மகிழ்வர். மேலும் தாங்கள் கொண்டு வந்த சாப்பாடு, பனங்கிழங்கு, கரும்பு, திண்பண்டங்களை உண்டு மகிழ்வர்
ராஜாஜி பூங்கா
இதே போன்று தூத்துக்குடியில் உள்ள ராஜாஜி பூங்காவிலும் மக்கள் கூட்டமாக குடும்பத்துடன் அங்கு உள்ள மரங்களுக்கு கீழே அமர்ந்து இருந்து, தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடுவைர். அங்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்வர். மேலும் பூங்காவிற்கு முன்பு அமைக்கப்பட்டு இருக்கும் கடைகளில் சிறுவர்-சிறுமியருக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
துறைமுக கடற்கரை
தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் காலை முதலே இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கூட்டம் கூட்டமாக வர தொடங்கும். இதனால் துறைமுக கடற்கரை மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும். இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். காணும் பொங்கலையொட்டி துறைமுக கடற்கரையில் தற்காலிகமாக உணவு கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும் அந்த கடைகளில் உள்ள பொருட்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு மகிழ்வார்கள்.
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை உள்ளது. இங்கு பொதுமக்கள் காணும் பொங்கலைக் கொண்டாடும் விதமாக குடும்பத்துடன் வருகை தருவார்கள்.
மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்காக ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரியக் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
மணப்பாடு கடற்கரை
அகன்று விரிந்த நீல வண்ணத்தில் நீண்ட கடற்கரை, உடலைத் தழுவும் காற்று, ஆங்காங்கு அதிசயக்க வைக்கும் குன்றுகள், ஊர் முழுவதும் தேவாலயங்கள், விண்ணைத் தொடும் பனை மரங்கள், கரையைக் கொஞ்சிவிட்டு செல்லும் கடல் அலைகள், படகுகள், வள்ளங்கள், வாஞ்சையோடு அன்பு செலுத்தும் மீனவ மக்கள் என அற்புதமான நெய்தல் நில அனுபவத்துக்காக மணப்பாட்டிற்கு காணும் பொங்கலை கொண்டாடச் செல்வோர் ஏராளம்.
கடலோரம் சரிவான மணல் குன்றுகள், மணல் குன்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு தற்போதும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கலங்கரை விளக்கம். அதன் அருகில் வியக்கும் வகையில் போர்ச்சுக்கீசியக் மாடலில் வானுயர்ந்து நிற்கும் தொன்மையான தேவாலயங்கள் என மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து தீவு போல அமைந்துள்ளது மணப்பாடு கடற்கரை.
குட்டி கோவா, சின்ன ரோமாபுரி, தென் ஆசியாவின் வெனிஸ் என்வும் இதனை அழைக்கிறார்கள். மணப்பாடு கடற்கரையில் அமைந்துள்ள மணல் குன்றின் வட கடல் அமைதியாகவும், தென் கடல் ஆர்ப்பரித்தும் காட்சி அளிக்கும். இந்த மணல் குன்றின் மீது நின்றுப் பார்த்தால் ஊரின் மொத்த அழகும் தெரியும். கடலைப் பார்த்தவுடன் ஓடிச்சென்று கால் நனைக்கவும், குளிக்கவும் தோன்றும். இயற்கை, கடல், நீதானே என் பொன்வசந்தம், நீர்ப்பறவை, மரியான், சிங்கம் போன்ற திரைப்படங்கள் காட்சிகளும் இங்கு எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அழகும் சிறப்பும் கொண்ட மணப்பாட்டிற்கு பொதுமக்கள் காணும் பொங்கலைக் கொண்டாடும் விதமாக குடும்பத்துடன் வருகை தருவார்கள். அதே போல் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் கோவில் கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் சென்று காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்வர்.
ஆற்றங்கரையோரம்
ஸ்ரீவைகுண்டம், ஏரல், முறப்பநாடு உள்ளிட்ட ஊர்களில் தாமிரபரணி கரையோரங்களிலும், விளாத்திகுளம் மற்று அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கரும்பு, பனங்கிழங்கு, வீட்டில் சமைத்த அசைவ உணவை வைப்பாற்றுக்கு எடுத்து வந்து மணற்பரப்பில் உட்கார்ந்து உறவினர்களுடன் சாப்பிட்டு மகிழ்ச்சி அடைவர்.