2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை டார்கெட் செய்து கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய், விக்கிரவாண்டியில் மாநாட்டில் தனது கொள்கைகளை அறிவித்து தங்களது அரசியல் ரீதியான எதிரிகளை கைகாட்டி, கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் இறங்கினார். இருப்பினும், கட்சி ரீதியாக தவெகவில் நிர்வாகிகளை பலப்படுத்தாமல் இருந்ததால் விஜய்யின் தவெக விமர்சனத்தில் சிக்கியது.
இந்தநிலையில், அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்துள்ள நிலையில், தவெகவில் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார் நிறுவனத் தலைவர் விஜய். கட்சி ரீதியாக 100 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்க உத்தரவிட்டார். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை மாவட்ட செயலாளர் பதவிதான் மிக முக்கியமானது.
இந்தநிலையில், சென்னை பனையூரில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. நான்கு மாதங்களாக மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வந்த நிலையில், இன்று இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், விக்கிரவாண்டி மாநாட்டின் மூலம் தனது பலத்தை காட்டிய விஜய், அடுத்த மாநாட்டிற்கும் தயாராகி வருவதாக சொல்கின்றனர். நெல்லையில் அடுத்த மாநாடு நடக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தவெக தரப்பில் விசாரித்த போது இன்னும் இடம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
விக்கிரவாண்டி மாநாட்டில் தனது கொள்கை பற்றியும், அரசியல் எதிரியை கைகாட்டியும் பேசிய விஜய், அடுத்த மாநாட்டை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். அதற்கு முன்பு கட்சி ரீதியான பணிகளை முழுவதுமாக முடித்து வைத்துவிட்டு பெரும் படையுடன் மேடையில் ஏற விஜய் முடிவெடுத்துள்ளதாக தவெக கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் 100 மாவட்ட செயலாளர்கள் தயாராகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம் எனக் கூறி முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று காலை தலைமையகத்திலிருந்து அழைப்பு சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்து முக்கிய நிர்வாகிகள் இன்று காலை பனையூர் அலுவலகத்தில் முகாமிட்டனர்.
திடீர் மீட்டிங், நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனை என்பதால் கட்சியின் தலைவரான விஜய் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என நிர்வாகிகளும் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 10.30 மணிக்கு பனையூர் தலைமையகத்தை அடைந்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தலைவர் கூட்டத்திற்கு வரவில்லை. நிர்வாகிகளுடன் கட்சியின் மேம்பாடு சம்பந்தமாக மட்டுமே பேசப்போகிறோம் என்ற விஷயத்தைச் சொன்னார்
மேலும், ஒரு சில முக்கிய நிர்வாகிகளுடன் தனியாக பேசிய ஆனந்த், 11.30 மணிக்கு மேல் ஒரு லிஸ்ட்டை கொடுத்து அந்த லிஸ்ட்டில் பெயர் இருக்கும் நிர்வாகிகளை மட்டும் மீட்டிங்கில் இருக்குமாறு அறிவுறுத்தினார். மாவட்டத் தலைவர்கள், மகளிரணி தலைவர்கள் மற்றும் சில முக்கிய அணிகளின் தலைவர்களை மட்டும் உள்ளே இருக்க அனுமதி தரப்பட்டது. 4 மணிக்கு மேல் உங்களையெல்லாம் ஆனந்த அண்ணன் சந்திப்பார் எனச் சொல்லி மற்ற நிர்வாகிகளையெல்லாம் அலுவலகத்துக்கு வெளியே காத்திருக்க அறிவுறுத்தினர்.
பின்னர், உள்ளே ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியாக அழைத்து ஆனந்த் கருத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். முக்கியமான விஷயங்களை பேசுவதால் உள்ளே இருந்த நிர்வாகிகளின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர். மாவட்ட அளவில் கட்சியின் நிலை என்னவாக இருக்கிறது, புதிதாக அறிவிக்கப்படவிருக்கும் நிர்வாகிகளின் பின்னணி என்ன என்பதைப் பற்றியெல்லாம் உள்ளே பேசப்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. தலைமை தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் புதிய நிர்வாகிகளை பற்றிய பழைய நிர்வாகிகளின் எண்ணங்களை கேட்டறியவே இப்படி பெர்சனல் மீட்டிங்காம். எல்லாம் முடிந்து நிர்வாகிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு விஜய் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியாக தனித்தனியே அழைத்துப் பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் அஜிதா ஆக்னல் இந்த நிர்வாகிகள் கூட்டத்துக்கே மாநாடு போல டூரிஸ்ட் பஸ்ஸில் தொண்டர்களை அழைத்து வந்து கட்சி அலுவலகத்துக்குள் சென்ற போது, யார் இவங்க? எந்த ஊர்ல இருந்து வந்திருக்காங்க என மற்ற மாவட்டத்தில் இருந்து வந்திருந்த நிர்வாகிகளின் புருவத்தை உயர்த்த செய்திருக்கிறார் அஜிதா ஆக்னல்.
அஜிதா ஆக்னலின் சுறுசுறுப்பான தீவிர அரசியல் செயல்பாடுகள் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது தவெகவை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இவரை போன்றோரை அதிகாரபூர்வமாக தவெக தலைமை அறிவிக்கும் போது, ஆண்ட மற்றும் ஆளுகின்ற கட்சிகளின் அரசியல் நகர்வுகளை நிச்சயம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டம் காண செய்வார் என்று கணிக்கின்றனர் உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள்.
மாவட்ட செயலாளர் பதவியை அதிகார பூர்வமாக தரட்டும் அதன் பின் அரசியல் செய்வோம் என்று நிற்கும் சக கோஷ்டி நிர்வாகிகள் மத்தியில், பொறுப்பாளராக நியமிக்கப்பட்டால் கூட அதை பொறுப்போடு நின்று அரசியல் செய்து பொதுமக்கள் மத்தியிலும், கட்சியினர் மனதிலும் இடம் பிடிக்கும் அஜிதா ஆக்னலை அதிகார பூர்வமாக தலைவர் விஜய் அறிவித்தால், நிச்சயம் தூத்துக்குடியில் தவெக தனிப்பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என உறுதிபட கூறுகின்றனர் சில உள்ளூர் தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும்.
சென்னையிலே ஒரு நாள் நிகழ்விற்கே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக அரசியல் செய்ய தூத்துக்குடி பெண் நிர்வாகி, தனது சொந்த மாவட்டத்தில் சும்மாவா விடுவார். திமுகவின் தலைவரான தளபதி மு.க.ஸ்டாலின் நம்பிக்கையான பெண் சிங்கமும் தூத்துக்குடி தான். தவெக தலைவர் இளைய தளபதியின் நம்பிக்கையான பெண் சிங்கமும் தூத்துக்குடி தான். மொத்தத்தில் தளபதிகளின் அரசியல் பெண் தளபதிகள் தூத்துக்குடி பெண்கள் தான் என ஹைப் கொடுக்கின்றனர் அஜிதா ஆக்னலின் தவெக தம்பிகள்.