• vilasalnews@gmail.com

நாதகவில் இருந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் விலகல்!

  • Share on

நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் 32 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பல மாவட்ட செயலாளர்கள், கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன், நிர்வாகிகள் அருண் ஆறுமுகம், செல்வகணபதி, சக்திவேல் சந்தனராஜ், பேச்சி ராஜா  சுடலை கண்ணு, ரமேஷ் உட்பட 32 நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். பின்னர் தங்களது உறுப்பினர் அட்டையை ஒப்படைத்தனர்.


இதுகுறித்து மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் கூறுகையில்:-


கடந்த 2009 முதல் நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்தே பயணித்து வருகிறேன். 2016, 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் வைகுண்டம் தொகுதி வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளேன். தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தும் சிறிய மரியாதை கூட இல்லை. கட்சி தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் எங்களோடு செய்வதில்லை. 


உண்மையான தமிழ் தேசிய ஈடுபாட்டுடன் கட்சியில் பயணித்தோம். ஆனால் தற்போது தமிழ் தேசிய ஈடுபாடு இல்லாதவர்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் கட்சிக்கு வரும்போது அவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாங்கள் விலகுவதற்கு முக்கிய காரணம் சாட்டை துரைமுருகன் தான். எனக்கு ஜூனியரான அவர், கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.


கடந்த 2023 டிசம்பர் மாதம் மழை வெள்ளத்திற்கு பிறகு நிவாரணம் கொடுக்க சீமான் வந்த போது இப்பகுதியில் உள்ள பஞ்சாயத்துகளில் எங்களிடம் எந்தவித ஆலோசனையும் செய்யாமல் சமூக ரீதியான பஞ்சாயத்து தலைவர்களிடம் சாட்டை துரைமுருகன் நேரடியாக பேசி நிவாரணம் வழங்கினார். அவரது உறவினர் இல்லத்தில் வைத்து நிவாரண பொருட்களை வழங்கினார். கட்சி நிர்வாகிகள் குறித்து நாங்கள் பட்டியல் கொடுக்கும்போது அதனை சாட்டை துரைமுருகன் அலட்சியப்படுத்துவார். எங்களோடு 32 பொறுப்பாளர்கள், தற்போது கட்சியிலிருந்து விலகி உள்ளனர். இதேபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களும் விலக தயாராக உள்ளனர். எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றார்.

  • Share on

பசுபதி பாண்டியன் நினைவு தினத்திற்கு தூத்துக்குடி நகரத்திற்குள் வர அனுமதி கிடையாது!

தூத்துக்குடியில் மூடப்படும் மதுக் கடைகள், பார்கள் லிஸ்ட்!

  • Share on