குறுக்குச்சாலை அருகே வாகனம் மோதியதில் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (57). இவரது மகன் காமராஜ் (21). இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து, கடந்த 5 ஆம் தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 மணிக்கு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்கு பின்னால் எட்டயபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற வேன் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் 2 பேர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். காமராஜிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வேனை, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து பிடிக்க தேடி வருகின்றனர். வேன் மோதி பாதயாத்திரை பக்தர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.