தூத்துக்குடியில் தனியார் நிறுவன காவலாளி வீட்டை உடைத்து 7 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி எஸ்எஸ் தெருவை சேர்ந்தவர் சங்கர் ( 62 ). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் இவர், கடந்த 4ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சுவாமி தரிசனம் முடித்த பிறகு, கடந்த 6ஆம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்து சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு மர்ம கும்பலை தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் காவலாளியின் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.