
கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று ரோந்து சென்றபோது லட்சுமிபுரம் டெக்ஸ்டூல் பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2.5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் கத்தி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போதைபொருள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கைது செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம், நாடார் தெருவை சேர்ந்த ராஜ்குமார் என்கிற தம்பி ராஜா (60). பிரபல ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள் உட்பட கொள்ளை, ஆள் கடத்தல், போதை பொருள் கடத்தல் வழக்குகளும் உள்ளது.
இதில், கடந்த 2016ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கோவையில் போலீசார் தேடினர். அப்போது தப்ப முயன்றதில் அவருக்கு இரண்டு கால்களும் முறிந்தது. தற்போது சென்னை அசோக் நகரில் வசிக்கும் இவர், பெங்களூரில் இருந்து போதைப்பொருள் வாங்கி கோவையில் விற்பனை செய்தபோது போலீசில் சிக்கி உள்ளார். இவரது பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவருக்கு போதை பொருள் சப்ளை செய்தது யார்? வேறு ஏதேனும் நோக்கத்துடன் கோவை வந்தாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர்.
குறிப்பாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் ராஜ்குமார், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை ஆனைகுடியை சேர்ந்த ராக்கெட் ராஜாவின் கூட்டாளி என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.