
தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானபடுத்தும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தூத்துக்குடியில் நாளை 7ஆம் தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன், மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார். அதன் உச்சக்கட்டமாக சட்டப்பேரவையில் காலகாலமாக கடைபிடித்து வரும் மாண்பை மீறும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடவிடாமல் அவமானப்படுத்தியுள்ளார்.
ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை மடைமாற்றவும்மான வித்தைகளைச் செய்யும் அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணியை கண்டித்தும், தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமானப்படுத்தும் தமிழக ஆளுநரை கண்டித்து நாளை 7.1.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தலைமைக் கழகத்தின் அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 7.1.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தூத்துக்குடி பாளைரோடு சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்திட வடக்கு, தெற்கு மாவட்ட செயலாளர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.