• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே வார்டு உறுப்பினர் செய்த திடீர் சம்பவம்... யாருமே இதை எதிர்பார்த்திருக்கமாட்டாங்க!

  • Share on

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தமிழ்நாட்டின் மிகப்பெரிய பஞ்சாயத்துகளில் ஒன்றாகும்.


ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும், சுமார் 40,000 வாக்காளர்களை கொண்ட இந்த மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில், பெரும்பாலானோர் தினசரி கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள், வியாபாரிகள் தான் உள்ளனர்.


இங்கு சாலைகள், தெரு விளக்குகள், வடிகால் அமைப்புகள், மழைநீர் வடிகால், பொதுக் கழிப்பறைகள், மேல்நிலை தீர்தேக்க தொட்டிகள் மற்றும் பேருந்து நிழற்குடைகள் போன்ற சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் உள்ளது. மாப்பிள்ளையூரணி சுமார் 10 கிமீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. இது மீன்பிடி குக்கிராமங்கள் மற்றும் மீன் வணிக மையங்களைக் கொண்டுள்ளது. இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் ஐந்து ஆண்டுகளில் அதன் மக்கள் தொகை இரண்டு லட்சத்தை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது.


மாப்பிள்ளையூரணி மக்களை வாட்டி வதைக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று போதிய குடிநீர் விநியோகம் இல்லாதது தான். கடந்த 2023 டிசம்பர் வெள்ளத்தின் போது மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும். மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் உள்ளாட்சி அமைப்பு, நகர்ப்புறங்களுக்கு இணையாக போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். 


இதனால், தூத்துக்குடி மாநகராட்சியுடன் மாப்பிள்ளையூரணி இணைக்கப்பட்டால் குடிநீர்த் திட்டங்கள், உள்கட்டமைப்பு, பேருந்து நிலையம், பூங்கா, கல்வி நிறுவனங்கள் ஆகியவை சிறப்பாக அமையும் என அந்த பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர். ஆகவே, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.


மேலும்,  கடந்த 2010 ஆம் ஆண்டில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அப்போதைய நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலெட்சுமி, தமது அறிக்கையில், எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தூத்துக்குடியை திட்டமிட்ட நகரமாகவும் முன் மாதிரி நகரமாகவும் மாற்றி அமைக்க  தூத்துக்குடியை சுற்றியுள்ள 10 ஊராட்சிகளை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பது மிக அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது என அவர் குறிப்பிட்டார். அதில் மாப்பிள்ளையூரணியூம் ஒன்றாகும்.  ஆனால் அப்போது தூத்துக்குடி மாநகராட்சியுடன் மாப்பிள்ளையூரணி இணைக்க முடியாமல் போனது.


இந்தநிலையில், சில்லாநத்தம் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் அறைகலன்கள் பூங்கா அமைவதன் மூலம் இவ்வூராட்சி தொழில்மயமாகி வருவதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், 2025 ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கவுள்ள வின்ஃ பாஸ்ட் மின்கல வாகனங்கள் தொழிற்சாலையின் மூலம் இப்பகுதியின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மேலும், மாப்பிள்ளையூரணி, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், மறவன்மடம், முள்ளக்காடு மற்றும் குமாரகிரி ஆகிய ஊராட்சிகள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளன. மேற்குறிப்பிடப்பட்டுள்ள 7 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைப்பதன் மூலம், அப்பகுதிகள் நீடித்த நகர்ப்புர வளர்ச்சி, மேலும் சிறப்பான நிருவாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பெறுவதற்கு ஏதுவாகும். எனவே சில்லாநத்தம், மாப்பிள்ளையூரணி, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், மறவன்மடம், முள்ளக்காடு மற்றும் குமாரகிரி ஆகிய ஊராட்சிகள் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக உத்தேச முடிவு குறித்த ஆணைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.


இதனையடுத்து, "மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்தால் மொட்டை அடித்துக் கொள்வேன்” என்று மாப்பிள்ளையூரணி 11 வது வார்டு உறுப்பினர் ஸ்டாலின் என்பவர் நேர்த்திக்கடன் செய்திருந்தாராம். ஆகவே, தற்போது மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தூத்துக்குடி மாநகராட்சி உடன் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து இன்று(ஜன.4) வேளாங்கண்ணி மாதா கோவிலில் முடி காணிக்கை செலுத்தினார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் மாற்றம்!

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா : மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!

  • Share on